திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் இருதரப்பு ஆட்டோ டிரைவர்கள் மோதிக் கொள்ளும் சூழ்நிலை ஏற்பட்டதால் பரபரப்பு…!
திருச்சி பஞ்சப்பூரில் கட்டப்பட்ட ஒருங்கிணைந்த பேருந்து முனையம் இம்மாதம் ஜூலை 16ம் தேதி முதல் பயன்பாட்டுக்கு வந்துள்ளது. இதன் காரணமாக மத்திய பேருந்து நிலையத்தில் இருந்து டவுன் பஸ்கள் மட்டுமே இயக்கப்படுகின்றன. இதனால், மத்திய பேருந்து நிலையத்தில் இதுவரை ஆட்டோ ஓட்டிக் கொண்டிருந்த டிரைவர்கள் பாடு திண்டாட்டம் ஆனது. அவர்கள் தங்களது வாழ்வாதாரத்தை கருத்தில் கொண்டு பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தங்களை அனுமதிக்க வேண்டும் என்று மாவட்ட நிர்வாகத்திடம் வேண்டுகோள் விடுத்தனர். அதேபோல மணிகண்டம், பஞ்சப்பூர், ராமச்சந்திர நகர், எடமலைப்பட்டி புதூர், கிராப்பட்டி போன்ற இடங்களில் ஆட்டோ ஓட்டி வரும் டிரைவர்களும் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்தில் தங்களுக்கும் நிரந்தர இடம் ஒதுக்க வேண்டும் என்று கேட்டுள்ளனர். இந்நிலையில் இன்று (ஜூலை 18) 300க்கும் மேற்பட்ட ஆட்டோ டிரைவர்கள் தங்களது ஆட்டோக்களுடன் பஞ்சப்பூர் பேருந்து நிலையத்திற்கு அணிவகுத்து வந்தனர். அங்கு, ஏற்கனவே உள்ளூர் ஆட்டோக்கள் நிறுத்தப்பட்டுள்ள பகுதியின் எதிர்புறம் தங்களது ஆட்டோக்களை நிறுத்தி பயணிகளை ஏற்றினர். இதனால் உள்ளூர் ஆட்டோ டிரைவர்களுக்கும், மத்திய பேருந்து நிலைய பகுதிகளில் இருந்து சென்ற ஆட்டோ டிரைவர்களுக்கும் இடையே மோதல் ஏற்படும் சூழ்நிலை உருவானது. அப்போது ஒருங்கிணைந்த பேருந்து நிலையத்தில் பாதுகாப்பு பணியில் ஈடுபட்ட போலீசார் விரைந்து வந்து அவர்களை சமாதானப்படுத்தினர். உங்களது பிரச்சனை குறித்து அதிகாரிகளின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்ததன் பேரில் அமைதியாக கலைந்து சென்றனர். இருதரப்பு ஆட்டோ டிரைவர்கள் இடையே மோதல் உருவாகும் சூழ்நிலை ஏற்பட்டதால் பேருந்து நிலையத்தில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது.
Comments are closed.