திருச்சி விமான நிலையத்தில், மதிமுக முதன்மை செயலாளரும் எம்.பியுமான துரை வைகோ செய்தியாளர்களை சந்தித்தார். அப்போது அவர் கூறுகையில், துணை ஜனாதிபதி ஜெகதீப் தன்கர் ராஜினாமா செய்தது பல்வேறு சந்தேகங்களை எழுப்பி உள்ளது. மருத்துவ காரணங்களால் ராஜினாமா என்று கூறினாலும் கூட அவர் ராஜினாமாவில் அரசியல் காரணங்கள் உள்ளது. அவருடைய திடீர் ராஜினாமா பா.ஜ.கவின் மூத்த தலைவர்களுக்கே அதிர்ச்சியாக உள்ளது. அவர் ராஜினாமா குறித்தான உண்மையான காரணம் பிரதமர் நரேந்திர மோடிக்கும், உள்துறை அமைச்சர் அமித்ஷா விற்கும் தான் தெரியும். திமுக கூட்டணியில் உள்ள கட்சிகள் திமுக அரசு தவறு செய்யும் போது அதை சுட்டிக்காட்டுகிறோம், தேவைப்படும் நேரத்தில் போராட்டங்களும் நடத்துகிறோம். அதே நேரத்தில் எந்த நோக்கத்திற்காக திமுக கூட்டணியில் இணைந்துள்ளோமோ அந்த நோக்கத்திற்காக தொடர்ந்து இணைந்து பயணித்து வருகிறோம் என்று கூறினார். பேட்டியின்போது மதிமுக திருச்சி மாநகர் மாவட்ட செயலாளர் வெல்லமண்டி சோமு, தெற்கு மாவட்ட செயலாளர் மணவை தமிழ்மாணிக்கம் ஆகியோர் உடன் இருந்தனர்.
Comments are closed.