உயிரிழந்த மூதாட்டியின் சடலத்தில் இருந்த நகைகள் திருட்டு: திருச்சி அரசு மருத்துவமனை ஒப்பந்த ஊழியர் கைது…!
திருச்சி, புத்தூர் கல்லாங்காடு பகுதியைச் சேர்ந்தவர் சந்திரா (வயது 70 ). முதுமை காரணமாக கடந்த சில தினங்களாக உடல்நிலை பாதிக்கப்பட்டு தனியார் மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வந்தார். பின்னர், அங்கிருந்து திருச்சி புத்தூர் அரசு தலைமை மருத்துவமனையில் அவசர சிகிச்சை பிரிவில் சேர்க்கப்பட்டார். ஆனால், அவர் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார். அவரது உடலை உறவினர்கள் ஆம்புலன்ஸ் மூலம் எடுத்துச் செல்ல வெளியே சென்று இருந்தனர். அந்த நேரத்தில் மூதாட்டி கழுத்தில் இருந்த 2 பவுன் சங்கிலி திருட்டு போனது. காதும் அறுக்கப்பட்டு கம்மல் கீழே கிடந்தது. பின்னர், வெளியே சென்றிருந்த உறவினர்கள் வந்து பார்த்தபோது இதனைப் பார்த்து அதிர்ச்சி அடைந்தனர். இதுகுறித்து அரசு மருத்துவமனை காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். புகாரின் அடிப்படையில் போலீசார் வழக்கு பதிவு செய்து சிசிடிவி காட்சிகளை பார்வையிட்டு விசாரணை நடத்தினர். அதில் அதே மருத்துவமனையில் கடந்த பத்தாண்டுகளுக்கு மேலாக ஒப்பந்த அடிப்படையில் ஹவுஸ் கீப்பராக பணியாற்றி வரும் ஆர்ச்சம்பட்டியைச் சேர்ந்த மோகன் ( 40 ) என்பவர் நகைகளை திருடியது தெரிய வந்தது. அதன்பேரில் அவரை போலீசார் கைது செய்தனர்.

Comments are closed.