Rock Fort Times
Online News

சாலையோரம் நிறுத்தப்பட்டிருந்த லாரியில் 290 லிட்டர் டீசல் திருட்டு- புகார் அளிக்க சென்ற டிரைவர் மீதே வழக்கு பதிவு செய்யப்போவதாக போலீசார் மிரட்டுவதாக எஸ்பி அலுவலகத்தில் புகார்…! ( வீடியோ இணைப்பு)

தூத்துக்குடி மாவட்டம், ஆறுமுகநேரி பகுதியில் செயல்படும் கெமிக்கல் தொழிற்சாலையில் இருந்து ஆசிட் ஏற்றிய லாரியொன்று  கடலூர் நோக்கி சென்று  கொண்டிருந்தது. அந்த லாரியை இசக்கிமுத்து என்பவர் ஓட்டி சென்றார்.  கடந்த 06-09-2024 அன்று இரவு 11.30 மணி அளவில் திருச்சி மாவட்டம் துவரங்குறிச்சி அருகே லாரி வந்து கொண்டிருந்தபோது டிரைவருக்கு உறக்கம் வரவே அப்பகுதியில் உள்ள பெட்ரோல் பங்க் அருகே சாலை ஓரத்தில் லாரியை நிறுத்தி விட்டு தூங்கி உள்ளார்.  பின்னர் அவர் நள்ளிரவு 2.30 மணி அளவில்  லாரியை ஸ்டார்ட் செய்தபோது ஸ்டார்ட் ஆகவில்லை.  இதனால், சந்தேகம் அடைந்த அவர் கீழே இறங்கி பார்த்தபோது டீசல் டேங்க் பூட்டு உடைக்கப்பட்டு 290 லிட்டர் டீசல் திருடப்பட்டது இருப்பது  கண்டு அதிர்ச்சி அடைந்தார்.  இதுகுறித்து துவரங்குறிச்சி காவல் நிலையத்தில் புகார் அளிக்க சென்றார். ஆனால் காவல் நிலையத்தில் புகாரை பெறாமல் டிரைவர் இசக்கி முத்துவை இரண்டு நாட்களாக  அலைக்கழித்ததாக கூறப்படுகிறது.  மேலும், புகார் அளிக்க வந்த டிரைவர் மீதே  வழக்குப்பதிவு செய்யப்போவதாக, போலீசார் மிரட்டியதாகவும் கூறப்படுகிறது. இது குறித்த தகவலின்பேரில் லாரி உரிமையாளர்கள் நேரில் சென்று புகார் அளிக்க சென்றபோது அவர்களிடமும் புகார் மனுவை போலீசார் பெறவில்லை என்று கூறப்படுகிறது.

இதுதொடர்பாக அமைப்பின் மாநிலத் தலைவர் கணேஷ் தலைமையில் லாரி உரிமையாளர்கள் திருச்சி மாவட்ட காவல் கண்காணிப்பாளர் வருண்குமாரிடம் புகார் அளித்தனர்.  அந்தப் புகாரில்,  டேங்கர் லாரியில் 290 லிட்டர் டீசல் திருட்டு போய் உள்ளது.அதன் மதிப்பு சுமார் 27 ஆயிரம் ரூபாய்.  லாரி நின்றிருந்த போது அந்த வழியே சென்ற இண்டிகா காரில் வந்த மர்ம நபர்கள் இந்த திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்று சந்தேகிக்கிறோம்.  சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என குறிப்பிட்டு இருந்தனர்.  புகார் அளித்த பிறகு செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த கணேஷ்,  துவரங்குறிச்சி போலீசார் எங்கள் புகாரை வாங்க மறுத்தனர். அதோடு கடந்த இரண்டு தினங்களாக அலைக்கழித்து இறுதியில் டிரைவர் மீதே குற்றம் சாட்டுகின்றனர்.  இதுபோன்ற டீசல் திருட்டு சம்பவங்கள் அப்பகுதியில் தொடர்கதையாகி வருகிறது.  இதற்கு முற்றுப்புள்ளி வைக்கும் வகையில் குற்றவாளிகளை கண்டறிந்து உடனடியாக நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றார்.  எஸ்பி அலுவலகத்தில் புகார் அளிக்கப்பட்டதை தொடர்ந்து தற்போது துவரங்குறிச்சி போலீசார் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

 

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்