திமுக இளைஞரணி நிர்வாகிகள் மாநாடு விருதுநகர் மாவட்டம், கல்குறிச்சியில் நடைபெற்று வருகிறது. இந்த மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக ஸ்நாக்ஸ், குடிநீர் பாட்டில், ஜூஸ் உள்ளிட்டவை அடங்கிய சிற்றுண்டி பைகள் நாற்காலிகளில் வைக்கப்பட்டுள்ளன. தமிழ்நாடு சட்டசபை தேர்தல் நெருங்கி வரும் நிலையில், அனைத்து கட்சிகளும் தேர்தல் பணிகளில் தீவிரமாக ஈடுபட்டு வருகின்றன. அந்த வகையில் திமுகவும் தனது கட்சி கட்டமைப்பை வலுப்படுத்தும் பணியில் மும்முரமாக செயல்பட்டு வருகிறது. கடந்த ஆண்டு ஜூன் மாதம் மதுரையில் பொதுக்குழு கூட்டம், அதன் பின்னர் ‘உடன்பிறப்பே வா’ சந்திப்பு, கரூரில் திமுக முப்பெரும் விழா, திருவண்ணாமலையில் வடக்கு மண்டல இளைஞரணி மாநாடு, திருப்பூர் மற்றும் தஞ்சையில் மகளிர் அணி மாநாடுகள் என திமுக தொடர்ச்சியாக அரசியல் செயல்பாடுகளில் தீவிரம் காட்டி வருகிறது. அதன் தொடர்ச்சியாக, விருதுநகர் மாவட்டம் கல்குறிச்சியில் இன்று(07.02.2026) தென் மண்டல திமுக இளைஞரணி மாநாடு நடைபெறுகிறது. ‘தமிழகம் தலை குனியாது’ என்ற தலைப்பில் நடைபெறும் இந்த மாநாட்டில் திமுக தலைவர் மற்றும் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் கலந்து கொண்டு சிறப்புரையாற்றுகிறார். இந்த மாநாட்டில் தென் மண்டலத்தைச் சேர்ந்த 20 திமுக அமைப்பு மாவட்டங்களில் இருந்து மாவட்ட, மாநகர, நகர, பேரூராட்சி இளைஞரணி நிர்வாகிகள் உள்ளிட்ட சுமார் ஒன்றரை லட்சம் பேர் பங்கேற்கின்றனர். மாநாட்டுக்காக சுமார் 300 ஏக்கர் பரப்பளவில் பிரம்மாண்ட ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. மாநாட்டில் பங்கேற்கும் நிர்வாகிகளுக்காக பிஸ்கட், குடிநீர் பாட்டில், நொறுக்குத் தீனி, கடலை மிட்டாய், ஜூஸ் பாட்டில் ஆகியவை அடங்கிய சிற்றுண்டி பைகள் நாற்காலிகளில் முன்கூட்டியே வைக்கப்பட்டுள்ளன. மேலும், அனைவருக்கும் சுகாதாரமான முறையில் தயார் செய்யப்பட்ட மட்டன் பிரியாணி வழங்கவும் ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.

Comments are closed.