கடலூர் அருகே பணத்துக்காக சிறுவனை கடத்தி கொலை செய்த குற்றவாளிக்கு விதிக்கப்பட்ட தூக்கு தண்டனையை உச்ச நீதிமன்றம் 20 ஆண்டுகள் சிறை தண்டனை யாக குறைத்துள்ளது. கடலூர் அருகேயுள்ள கார்கூடல் கிராமத்தை சேர்ந்த சிறுவன் சுரேஷ் (வயது 7). கடந்த 2009ஆம் ஆண்டு பள்ளியில் இருந்து சுந்தரராஜன் என்பவர் கடத்தினார். பின்னர் ரூ.5 லட்சம் பணம் கேட்டு பெற்றோரை மிரட்டினார். ஆனால், பணம் தரப்படாததால் சிறுவன் சுரேஷ் கழுத்தை நெரித்து கொலை செய்த சுந்தரர்ராஜன், சிறுவனின் உடலை சாக்குமூட்டையில் வைத்து வீசிவிட்டு சென்றுவிட்டார் .இது தொடர்பாக போலீசார், வழக்கு பதிவு செய்து சுந்தரராஜனை கைது செய்தனர். இந்த வழக்கை விசாரித்த கடலூர் நீதிமன்றம், சிறுவனை கொலை செய்த குற்றச்சாட்டின் பேரில் சுந்தரராஜனுக்கு தூக்குத் தண்டனை விதித்தது. இந்த தீர்ப்பை சென்னை உயர் நீதிமன்றமும் உறுதி செய்தது. இதை எதிர்த்து சுந்தரராஜன் உச்ச நீதிமன்றத்தில் மேல் முறையீடு செய்தார். ஆனால் உச்ச நீதிமன்றமும், அவருக்கு விதிக்கப்பட்ட தூக்குத் தண்டனையை கடந்த 2013ம் ஆண்டு உறுதி செய்தது. ஆனால் இந்த தீர்ப்பினை மறு ஆய்வு செய்ய வேண்டும் என கோரி சுந்தரராஜன் சார்பில் 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. மனுவில் என்ன அந்த மனுவில், ”மரண தண்டனை விதிக்கப்பட்டவர்களின் அனைத்து கோரிக்கைகளும் 5 நீதிபதிகள் கொண்ட பெஞ்சின் முன்னிலையில் தான் விசாரிக்கப்பட வேண்டும் என சட்டக்கமிஷன் பரிந்துரை செய்திருக்கிறது. மாற்றாக, தூக்குத் தண்டனைக்கு எதிரான அப்பீலை 3 நீதிபதிகள் கொண்ட அமர்வான து விசாரித்துள்ளது . தூக்குத் தண்டனைக்கு எதிரான மனு, திறந்த நீதிமன்றத்தில்தான் விசாரிக்கப்படவேண்டும். அதுதான் ஒரு உயிரைப் பறிப்பதற்கு வழி வகுக்கிற நீதிமன்ற தவறுகளை தடுத்து நிறுத்துகிற தடைவேலியாக அமையும்” என்றார். இந்த மனுவை விசாரித்த நீதிபதிகள் பி.சதாசிவம், ஜே.எஸ்.கேஹர் தலைமையிலான அமர்வு, சுந்தரராஜனுக்கு தூக்குத் தண்டனையை நிறைவேற்ற இடைக்கால தடை விதித்தது. இந்த வழக்கில் விசாரணை நடைபெற்று வந்த நிலையில், உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய்..சந்திரசூட் தலைமையிலான பெஞ்ச், மறுஆய்வு மனுவின் மீது தீர்ப்பளித்த. “கடத்தல் மற்றும் கொலைக் குற்றங்களில் அவரது குற்றத்தை சந்தேகிக்க எந்த காரணமும் இல்லை” என்று கூறியது. இந்த குழந்தை படுகொலை செய்யப்பட்ட குற்றம் “கொடூரமானது” என்று தலைமை நீதிபதி கூறினார்.அதேநேரம் தூக்கு தண்டனைக்கு பதிலாக 20 ஆண்டுகள் கடுங்காவல் தண்டனையை காலம் தாழ்த்தாமல் அனுபவிக்க வேண்டும் என்றும் இதில் 14 ஆண்டுகள் பரோல் இல்லாத, விடுதலைக்கு வாய்ப்பு இல்லாத தண்டனையை அனுபவிக்க வேண்டும் என்றும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதி டி.ஒய். சந்திரசூட் கூறினார்.