வருகிற சட்டமன்ற தேர்தலில் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கப்படும்…- திருச்சியில் எடப்பாடி பழனிச்சாமி பேச்சு!
தமிழக சட்டமன்ற தேர்தலுக்கு இன்னும் குறைந்த மாதங்களே உள்ளதால் அதிமுக பொதுச் செயலாளர், முன்னாள் முதல்- அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தமிழகம் முழுவதும் சூறாவளி சுற்றுப்பயணம் மேற்கொண்டு பொதுமக்களை சந்தித்து உரையாற்றி வருகிறார். அந்தவகையில் திருச்சியில் இன்று ஆகஸ்ட் 23 முதல் 25ம் தேதி வரை 3 நாட்கள் சுற்றுப்பயணம் மேற்கொண்டு 9 சட்டமன்ற தொகுதிகளிலும் உரையாற்றுகிறார். இதற்காக விமானம் மூலம் சென்னையில் இருந்து திருச்சி வந்த அவருக்கு அதிமுக நிர்வாகிகள் உற்சாக வரவேற்பு அளித்தனர். பின்னர் அவர் மத்திய பேருந்து நிலைய பகுதியில் உள்ள ஒரு ஹோட்டலில் சிறிது நேரம் ஓய்வெடுத்தார். பின்னர் மாலை ஹோட்டலில் இருந்து புறப்பட்டு திருவெறும்பூர் சட்டமன்ற தொகுதிக்கு சென்றார். அங்கும் அவருக்கு உற்சாக வரவேற்பு அளிக்கப்பட்டது. அதனைத்தொடர்ந்து அங்கு அமைக்கப்பட்டிருந்த மேடையில் எடப்பாடி பழனிசாமி பேசியதாவது:- நிறைவேற்ற முடியாத வாக்குறுதிகளை அறிவித்து திமுக ஆட்சிக்கு வந்தது. திமுக ஆட்சிக்கு வந்த பின் விலைவாசி கடுமையாக உயர்ந்துள்ளது. அதிமுக ஆட்சியில் விலைவாசி கட்டுப்பாட்டில் இருந்தது. எம்ஜிஆரை விட தற்போதைய முதல்வருக்கு அதிக செல்வாக்கு இருப்பதாக அமைச்சர் கே.என்.நேரு பேசியுள்ளார். எம்.ஜி.ஆருக்கு தனி அடையாளம் இருந்தது. அவருக்கு இணை யாரும் கிடையாது. அதிமுக கொடுத்த அழுத்தத்தால் தான் மகளிர் உரிமை தொகையை திமுக அரசு வழங்கியது. தமிழகத்தில் சட்டம் ஒழுங்கு டி.ஜி.பி இந்த மாதம் ஓய்வு பெற உள்ளார். ஆனால் இதுவரை அடுத்த டி.ஜி.பி யாரை நியமிப்பது என்கிற பட்டியலை மத்திய அரசுக்கு அனுப்பவில்லை. அதில் ஏதோ கோளாறு இருக்கிறது. அதற்கு என்ன காரணம் என்பதை தமிழக அரசு விளக்க வேண்டும். தமிழகத்தில் மாணவர்களும், இளைஞர்களும் போதைக்கு அடிமையாகி சீரழியக்கூடிய நிலைக்கு வந்துள்ளார்கள். திமுக ஆட்சி இருக்கும் வரை மக்களுக்கும், ஏன் காவல் துறை அதிகாரிகளுக்குமே பாதுகாப்பில்லை. 6 மாதத்தில் ஆறு காவலர்கள் தமிழகத்தில் கொலை செய்யப்பட்டுள்ளார்கள். இந்த அரசு செயலிழந்து போனதை தான் அது காட்டுகிறது. அதிமுக ஆட்சியில் அதிக பள்ளிகள் திறக்கப்பட்டது. ஆனால் பள்ளி கல்வி துறை அமைச்சர் அன்பில் மகேஷ், எந்த விதியையும் பின்பற்றாமல் அதிமுக ஆட்சியில் பள்ளிகள் திறக்கப்பட்டதாக குற்றச்சாட்டு வைக்கிறார். பள்ளிகள் திறப்பது தவறா?. ஸ்டாலின் குடும்பத்திற்கு அடிமைசாசனம் எழுதி கொடுத்த அமைச்சர்கள் தான் திமுக அமைச்சர்கள் மக்களுக்காக உழைக்க கூடியவர்கள் அதிமுக அமைச்சர்கள். திமுக என்பது குடும்ப கட்சி, வாரிசு அரசியல். ஆனால் அதிமுக ஜனநாயகமுள்ள கட்சி. அதிமுகவில் சாதாரண தொண்டன் கூட உழைத்தால் உயர்ந்த நிலைக்கு வரலாம். திமுக என்பது கார்ப்பரேட் கம்பெனி. திமுகவில் மிசாவில் சிறை சென்றவர்கள் ஓரங்கட்டபட்டு விட்டார்கள். 2026 தேர்தல் குடும்ப அரசியலுக்கும், வாரிசு அரசியலுக்கும் முற்றுப்புள்ளி வைக்கும் தேர்தலாக இருக்கும். மின் கட்டண உயர்வால் சிறு, குறு, நடுத்தர தொழில்கள் பாதிக்கப்பட்டுள்ளது. வரி மேல் வரி போட்டு மக்கள் தலை மேல் சுமையை சுமத்தி உள்ள அரசு திமுக அரசு. அதிக கடன் வாங்கியதில் முதல் மாநிலம் தமிழ்நாடு. தமிழ்நாட்டு மக்களை கடனாளியாக ஆக்கிய அரசு திமுக அரசு. சுதந்திரத்திற்கு பின் தமிழகத்தில் ஆட்சி செய்தவர்கள் மொத்தமாக வாங்கிய கடனே 5 லட்சத்து 18 ஆயிரம் கோடி தான். ஆனால் 2021 ல் திமுக ஆட்சிக்கு வந்த பின் 5 லட்சத்து 38 ஆயிரம் கோடி கடன் வாங்கப்பட்டுள்ளது. அதிமுக ஆட்சிக்கு வந்த பின் ஜல்லிக்கட்டு வீரர்களுக்கு தகுந்த பாதுகாப்பும், உதவிகளும் செய்யப்படும். சென்னையில் மின் கம்பி அறுந்து விழுந்து தூய்மை பணியாளர் உயிரிழந்துள்ளார். திமுக ஆட்சியில் மக்களுக்கு பாதுகாப்பு இல்லை என்பதை தான் அது காட்டுகிறது. விவசாய நிலங்களை பிடுங்கிய அரசு திமுக அரசு. டெல்டா மாவட்டஙகளை பாதுகாக்கப்பட்ட வேளாண் மண்டலங்களாக அறிவித்து விவசாய நிலங்களை பாதுகாத்த அரசு அதிமுக அரசு. காவேரி நதி நீர் விவகாரத்தில் நல்ல தீர்ப்பை பெற்று தந்த அரசு அதிமுக அரசு. அதிமுக ஆட்சி அமைந்த பின் வீடில்லா ஏழை எளியவர்களுக்கு கான்கீரிட் வீடுகள் வழங்கப்படும், திருமண உதவி திட்டம் மீண்டும் செயல்படுத்தப்படும். இவ்வாறு அவர் பேசினார். இந்த பிரச்சார கூட்டத்தில் முன்னாள் அமைச்சர்கள் தங்கமணி, விஜயபாஸ்கர், அதிமுக திருச்சி தெற்கு மாவட்ட செயலாளர் ப.குமார் மற்றும் கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.
Comments are closed.