தமிழக சட்டப்பேரவை தேர்தல் ஏப்ரல் மாதம் நடைபெறும் என எதிர்பார்க்கப்படும் நிலையில், தமிழக சட்டப்பேரவை கூட்டத்தொடர் நாளை(ஜன. 20) தொடங்கவுள்ளது. தேர்தலுக்கு முன்பு நடைபெற உள்ள கூட்டத் தொடர் என்பதால் முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது. அந்தவகையில் எதிர்கட்சியான அதிமுகவும், பாஜகவும் தமிழகத்தில் நடைபெறும் கொலை, கொள்ளை உள்ளிட்ட சட்டம்- ஒழுங்கு பிரச்சனையை எழுப்பவுள்ளது. மேலும், பல்வேறு துறைகளில் நடைபெற்றுள்ள முறைகேடுகள் தொடர்பான பிரச்சனையை எழுப்ப அதிமுக திட்டமிட்டுள்ளது. எனவே இந்த சட்டப்பேரவை கூட்டத்தொடர் ஆளுங்கட்சிக்கு கடும் சவாலாக இருக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. எதிர்கட்சிகள் ஒருபக்கம் பிரச்சனை எழுப்ப உள்ள நிலையில், மறு பக்கம் ஆளுநர் ரவியும் தமிழக அரசின் நிலைப்பாட்டிற்கு எதிராக உள்ளார். கடந்த 2023ம் ஆண்டு நடைபெற்ற ஆளுநர் உரையின் போது தமிழ்நாடு அரசு தயாரித்து அளித்த உரையில் பல வரிகளை வாசிக்காமல் தன்னுடைய கருத்துக்களை சேர்த்து பேசினார். அதில், பெரியார், அண்ணா, கருணாநிதி உள்ளிட்ட தலைவர்களின் பெயர்களையும், திராவிட மாடல் போன்ற வார்த்தைகளையும் வாசிக்காமல் புறக்கணித்தார். இதேபோல, 2025, இந்த ஆண்டு தொடக்கத்திலும் ஜனவரி மாதம் சட்டசபை தொடங்கிய போது சட்ட சபையில் தேசிய கீதத்திற்கு பதிலாக தமிழ்த்தாய் வாழ்த்து இசைக்கப்பட்டதால் ஆளுநர் ஆர்.என்.ரவி தனது உரையை வாசிக்காமலேயே சட்டசபையில் இருந்து வெளியேறினார். இதனால் ஆளுங்கட்சிக்கும், ஆளுநர் ரவிக்கும் இடையே தொடர்ந்து மோதல் ஏற்பட்டு வரும் நிலையில், நாளை நடைபெறும் கூட்டத்தில் ஆளுநர் ரவி கலந்து கொள்வாரா? என்பது தெரியவில்லை. ஆக மொத்தத்தில் இந்த பேரவை கூட்டத் தொடர் பரபரப்புக்கு பஞ்சம் இருக்காது என்பதில் சந்தேகமில்லை.

Comments are closed.