திருச்சியில் 14 ஆண்டுகளாக மூடப்பட்டிருக்கும் சிவாஜி சிலைக்கு பிறந்தது விடிவு காலம்…! * சோனா-மீனா தியேட்டர் அருகே இடமாற்றப்பட்டு மே 9-ம் தேதி திறக்கிறார் முதல்வர் மு.க.ஸ்டாலின்! (வீடியோ இணைப்பு)
“நடிகர் திலகம்” சிவாஜி கணேசனுக்கு இளம் வயது முதலே நடிப்பு மீது தீராத தாகம். எப்படியாவது நடிகன் ஆகி விட வேண்டும் என்று தனது இளவயதில் திருச்சி சங்கிலியாண்டபுரம் பகுதியில் இருந்த நாடகக் குழுவில் சேர்ந்து மேடை நாடகங்களில் நடிக்கத் தொடங்கினார். பின்னர் திரையுலகில் அறிமுகமாகி 300-க் கும் மேற்பட்ட படங்களில் நடித் துள்ளார். குறிப்பாக பராசக்தி, மனோகரா, வீரபாண்டிய கட்டபொம்மன், கப்பலோட்டிய தமிழன், கர்ணன் உள்ளிட்ட படங்கள் இவரது நடிப்பாலும், வசன உச்சரிப்பாலும் லட்சக்கணக்கான ரசிகர்களை பெற்றுத் தந்தது. குடும்ப படங்களிலும் தனது நடிப்புத் திறமையால் ஏராளமான பெண் ரசிகர்களையும் பெற்றார். அதோடு ரஜினிகாந்த், கமலஹாசன், விஜயகாந்த், சத்யராஜ், பாக்கியராஜ் போன்ற நடிகர்களோடும் இணைந்து நடித்தார். அவர் ஏற்று நடிக்காத கதாபாத்திரங்களே இல்லை என்று சொல்லும் அளவுக்கு அனைத்து கேரக்டர்களிலும் நடித்தார். செவாலியே விருது, பத்ம விபூஷண் உள்ளிட்ட ஏராளமான விருதுகளைப் பெற்றார். இவரது மறைவுக்குப் பின்னர், திருச்சியில் சிலை அமைக்க முடிவு செய்யப்பட்டது. இதற்கான ஏற்பாடுகள் திமுக ஆட்சியில் செய்யப்பட்டு 2011-ல் திருச்சி பாலக்கரை பிரபாத் ரவுண்டானா வில் சிவாஜி கணேசனுக்கு 9 அடி உயர முழு உருவ வெண்கலச் சிலை நிறுவப்பட்டது. சிலை திறப்பதற்கு முன் ஆட்சி மாற்றம் ஏற்பட்டதால், துணியைக் கொண்டு சிலை மூடப்பட்டது. சிலை திறப்பும் கிடப்பில் போடப்பட்டது.
தமிழ்த் திரையுலகில் மாபெரும் நடிகராக விளங்கி மக்கள் மனதில் இன்றும் நிறைந்துள்ள சிவாஜிகணேசன் சிலை நிறுவப்பட்டு 14 ஆண்டுகளுக்கு மேலாகியும் திறக்கப்படாமல் மூடி வைக்கப்பட்டுள்ளதைக் கண்டு அவரது ரசிகர்கள் பெரும் மன வருத்தத்துடன் இருந்து வந்தனர். சிவாஜி சிலையை திறக்க திருச்சியில் பல்வேறு அமைப்புகளை சேர்ந்தவர்கள் பல்வேறு போராட்டங்கள், மனுக்கள் அளித்து வந்த நிலையில் கடந்த சில தினங்களுக்கு முன்பாக தமிழக சட்ட சபையில் கிழக்கு சட்டமன்ற உறுப்பினர் இனிகோ இருதயராஜ் சிவாஜி சிலை திறப்பு தொடர்பாக கேள்வி எழுப்பினார். அதற்கு பதில் அளித்த அமைச்சர் கே.என்.நேரு திருச்சியில் நடிகர் சிவாஜி கணேசனின் சிலையை திறப்பது தொடர்பாக முதலமைச்சர் மு.க. ஸ்டாலினுடன் கலந்தாலோசித்த பிறகு, தமிழக அரசு நடவடிக்கை எடுக்கும் . சிலையை அதன் தற்போதைய இடத்தில் திறப்பதில் சில சட்ட சிக்கல் இருப்பதால் அதை வேறு இடத்தில் நிறுவ நடவடிக்கை எடுக்கப்படும் என்று கூறினார்.
இந்நிலையில் சிவாஜி கணேசன் சிலை தொடர்பாக அமைச்சர் கே.என்.நேரு அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். ஆலோசனைக் கூட்டத்தில் பாலக்கரை பகுதியில் அமைந்துள்ள சிவாஜி கணேசன் சிலையை அகற்றி சோனா-மீனா தியேட்டர் எதிரே உள்ள ரவுண்டானாவில் அமைப்பது என முடிவு செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. அதன்படி,சோனா- மீனா தியேட்டர் அருகே சிலை அமைய உள்ள இடத்தை அமைச்சர் கே.என்.நேரு பார்வையிட்டார்.மேலும், இன்று காலை சிவாஜி சிலை அமைப்பதற்கான பூர்வாங்க பணிகள் தொடங்கி நடந்து வருகிறது. இன்னும் ஒரு சில நாட்களில் பாலக்கரை ரவுண்டானாவில் உள்ள சிவாஜி முழு உருவ வெண்கல சிலை அகற்றப்பட்டு சோனா மீனா தியேட்டர் எதிரே நிறுவப்படுகிறது. அதற்கான பணிகள் முடிந்து மே 9-ந் தேதி சிலையை திறக்க மாவட்ட, மாநகராட்சி நிர்வாகங்கள் முடிவு செய்துள்ளன. திருச்சி, பஞ்சப்பூர் ஒருங்கிணைந்த பேருந்து நிலையம் திறப்பு விழா மே 9-ந் தேதி நடக்கிறது. முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் கலந்துகொண்டு பேருந்து நிலையத்தை திறந்து வைக்கிறார். அன்றைய தினம் சிவாஜி கணேசன் சிலையையும் முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் திறந்து வைப்பார் என்று தகவல்கள் தெரிவிக்கின்றன. இதனை அறிந்த சிவாஜி ரசிகர்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.