Rock Fort Times
Online News

மனிதநேய மக்கள் கட்சி உள்பட தமிழ்நாட்டில் பல முக்கிய அரசியல் கட்சிகளின் பதிவு ரத்து- தேர்தல் ஆணையம் நடவடிக்கை…!

இந்தியாவில் பா.ஜ.க., காங்கிரஸ் உள்ளிட்ட6 தேசிய கட்சிகளும், 67 மாநில கட்சிகளும் தேர்தல் கமிஷனால் அங்கீகரிக்கப்பட்ட அரசியல் கட்சிகளாக உள்ளன. இவைதவிர சுமார் 3 ஆயிரம் சிறிய கட்சிகள் தேர்தல் கமிஷனில் பதிவு செய்யப்பட்டு இருந்தன. அங்கீகரிக்கப்படாத கட்சிகளாக அவை இயங்கி வருகின்றன.இந்த கட்சிகளுக்காக தேர்தல் கமிஷன் பல்வேறு விதிமுறைகளை வகுத்து உள்ளது. அவற்றை மீறும் கட்சிகளின் அங்கீகாரத்தை தேர்தல் கமிஷன் அவ்வப்போது ரத்து செய்து வருகிறது. அந்தவகையில் கடந்த மாதம் 9-ந்தேதி நாடு முழுவதும் 334 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டது. அதில் தமிழகத்தைச் சேர்ந்த 22 கட்சிகள் இடம்பெற்றிருந்தன. இந்தநிலையில் 2-வது கட்டமாக நாடு முழுவதும் தேர்தல் கமிஷனின் விதிமுறைகளை மீறியுள்ள 474 பதிவு செய்யப்பட்ட அதேநேரம் அங்கீகரிக்கப்படாத அரசியல் கட்சிகளின் பதிவை தேர்தல் கமிஷன் ரத்து செய்துள்ளது. இதில் தமிழகத்தில் 42 கட்சிகள் இடம்பெற்று உள்ளன. ஆகமொத்தம் இதுவரை தமிழகத்தைச் சேர்ந்த 64 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளன. அத்துடன் 3-வது கட்டமாக கடந்த 2021-ம் நிதியாண்டு முதல் கணக்குகளை தாக்கல் செய்யாத 359 கட்சிகள் அடையாளம் காணப்பட்டுள்ளன. இந்த கட்சிகளும் விரைவில் நீக்கப்பட உள்ளன. இந்த பட்டியலில் தமிழகத்தில் 39 கட்சிகள் இருக்கின்றன. கடந்த 2 மாதங்களில் மட்டும் நாடு முழுவதும் 808 கட்சிகளின் அங்கீகாரம் ரத்து செய்யப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது. இந்திய தேர்தல் கமிஷனால் நடத்தப்பட்ட தேர்தல்களில் தொடர்ந்து 6 ஆண்டுகளாக போட்டியிடாதது உள்ளிட்ட விதிமீறலால் இந்த கட்சிகள் மீது நடவடிக்கை எடுக்கப்பட்டு இருப்பதாக தேர்தல் கமிஷன் வெளியிட்ட அறிக்கையில் கூறியுள்ளது. இந்நிலையில் ஜவாஹிருல்லா தலைவராக உள்ள மனிதநேய மக்கள் கட்சியின் பதிவை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது. கடந்த 3 தேர்தல்களில் தி.மு.க. கூட்டணியில் உதயசூரியன் சின்னத்தில் போட்டியிட்ட ம.ம.க. தனி சின்னத்தில் போட்டியிடாததால் பதிவை இழந்துள்ளது. இதேபோல, ஜான் பாண்டியன் தலைவராக உள்ள தமிழக மக்கள் முன்னேற்ற கழகத்தின் பதிவு, தமிமுன் அன்சாரியின் மக்கள் ஜனநாயக கட்சியின் பதிவு, கொங்கு நாடு மக்கள் தேசிய கட்சியின் பதிவு, எர்ணாவூர் நாராயணனின் சமத்துவ மக்கள் கழகத்தின் பதிவு, என்.ஆர்.தனபாலனின் பெருந்தலைவர் மக்கள் கட்சியின் பதிவு ஆகியவற்றை தேர்தல் ஆணையம் ரத்து செய்துள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்