கோடைகாலம் தொடங்குவதற்கு முன்பே திருச்சி மாவட்டத்தில் கடந்த சில நாட்களாக வெயிலின் தாக்கம் அதிகமாக இருந்து வருகிறது. இதனால், வாகன ஓட்டிகள் வெப்பத்தால் தவித்து வந்தனர். இந்தநிலையில் இன்று(11-03-2025) தமிழ்நாட்டின் பல்வேறு பகுதிகளில் மழை பெய்யும் என வானிலை ஆய்வு மையம் தெரிவித்திருந்தது. அதன்படி, மயிலாடுதுறை உள்ளிட்ட மாவட்டங்களில் காலை முதல் பல இடங்களில் மழை பெய்து வருகிறது. திருச்சி மாவட்டத்தில் வழக்கம்போல காலை வெயில் கொளுத்தினாலும் மதியம் 12 மணிக்கு பிறகு சீதோஷ்ண நிலையில் மாற்றம் ஏற்பட்டு வானம் மேக மூட்டத்துடன் காணப்பட்டது சற்று நேரத்தில் மழை பெய்யத் தொடங்கியது. இந்த மழை ஒரு மணி நேரத்திற்கு மேலாக நீடித்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழை நீர் பெருக்கெடுத்து ஓடியது. வாகன ஓட்டிகள் ஆங்காங்கே தங்களது வாகனங்களை நிறுத்திவிட்டு மழை நிற்கும் வரை சற்று நேரம் ஓய்வு எடுத்தனர். திருச்சி மாநகரில் காந்தி மார்க்கெட், பால்பண்ணை, சத்திரம் பேருந்து நிலையம், மத்திய பேருந்து நிலையம், கண்டோன்மென்ட், உறையூர், தில்லைநகர், தென்னூர் உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் மிதமான மழை பெய்தது. இதனால் வெப்பம் தணிந்து குளிர்ச்சி நிலவியது. மக்கள் மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.
Comments are closed.