”டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல”- தமிழ்நாடு அரசு தொடர்ந்த மனுக்கள் தள்ளுபடி…!
”டாஸ்மாக் நிறுவனத்தில் சோதனை நடத்தியது சட்டவிரோதம் அல்ல” எனக் கூறி அமலாக்கத்துறைக்கு எதிராக தமிழக அரசு தொடர்ந்த மனுவை சென்னை ஐகோர்ட் தள்ளுபடி செய்தது. சென்னை டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அண்மையில் அமலாக்கத்துறை சோதனை நடத்தியது. மாநில அரசின் அனுமதியின்றி நடத்தப்பட்ட சோதனையை சட்ட விரோதமானது என அறிவிக்கக் கோரியும், விசாரணை என்ற பெயரில் அதிகாரிகளை துன்புறுத்த தடை கோரியும், சென்னை ஐகோர்ட்டில், தமிழக அரசு மற்றும் டாஸ்மாக் நிர்வாகம் சார்பில் மனுக்கள் தாக்கல் செய்யப்பட்டன. நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அடங்கிய அமர்வு விசாரணை நடத்தியது. சட்டவிரோத பணப்பரிமாற்றத்தில் டாஸ்மாக் ஊழியர்கள் மற்றும் அதிகாரிகள் சிலர் ஈடுபட்டதாக தகவல் கிடைத்ததால் சோதனை நடத்தினோம் என அமலாக்கத்துறை தெரிவித்து இருந்தது. அனைத்து தரப்பு வாதங்களும் முடிவடைந்ததை அடுத்து, நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், கே.ராஜசேகர் அமர்வு இன்று (ஏப்ரல் 23) தீர்ப்பு அளித்தனர். அமலாக்கத்துறைக்கு எதிராக தொடரப்பட்ட தமிழக அரசின் மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்து உத்தரவிட்டனர். ‘டாஸ்மாக் தலைமை அலுவலகத்தில் அமலாக்கத்துறை நடத்திய சோதனை சட்டவிரோதம் அல்ல. அமலாக்கத்துறை நடத்திய சோதனை தேச நலனுக்கானது. நள்ளிரவு சோதனை நடத்திய போது ஊழியர்களை வீட்டுக்கு அனுப்பியதை ஏற்க முடியாது” என நீதிபதிகள் தெரிவித்தனர். அதுமட்டுமின்றி, சோதனை அடிப்படையில் தொடர்ந்து விசாரணை நடத்த அமலாக்கத்துறைக்கு ஐகோர்ட் அனுமதி அளித்துள்ளது.
Comments are closed.