Rock Fort Times
Online News

ராமதாஸ்- அன்புமணி இடையே பிரச்சனை நீடிப்பு- பா.ம.க.வின் மாம்பழம் சின்னத்திற்கு வந்தது சிக்கல்…!

பாமக தலைவர் டாக்டர் ராமதாசுக்கும், அவரது மகன் அன்புமணிக்கும் இடையே சமீப காலமாக பிரச்சனை நீடித்து வருகிறது. இரு தரப்பினரும் தனித்தனி அணியாக செயல்பட்டு வருகின்றனர். யார் தலைவர்? என்பது குறித்து தேர்தல் ஆணையத்திலும் புகார் அளிக்கப்பட்டு உள்ளது. அதில், ஆவணங்களின் அடிப்படையில் அன்புமணியை கட்சியின் தலைவராக ஏற்கிறோம் என தேர்தல் ஆணையம் தெரிவித்துள்ளது. இந்த முடிவு ராமதாஸுக்கு கடும் அதிர்ச்சியை ஏற்படுத்தி இருக்கிறது. தேர்தல் ஆணையத்தின் இந்த முடிவை எதிர்த்து நீதிமன்றத்திலும் வழக்கு தொடுக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் பா.ம.க. தலைவராக ராமதாஸ் தேர்ந்தெடுக்கப்பட்டதை அங்கீகரிக்க வேண்டும் என பா.ம.க., எம்.எல்.ஏ.,க்கள் ஜி.கே.மணி, அருள் உள்ளிட்டோர் அளித்த மனுவை, தலைமை தேர்தல் ஆணையம் நிராகரித்துள்ளது. அதேநேரம், பா.ம.க., தலைவராக, வருகிற 2026ம் ஆண்டு ஆகஸ்ட் வரை அன்புமணி தொடர்வார் என்ற பொதுக்குழு தீர்மானத்தை, தேர்தல் கமிஷன் அங்கீகரித்துள்ளது. அதனால், பா.ம.க., பெயர், கொடி, சின்னம் ஆகியவை அன்புமணி தலைமையிலான கட்சிக்கு சொந்தமாகியுள்ளன. இதை எதிர்த்து, ராமதாஸ் தரப்பில், டில்லி ஐகோர்ட்டில் வழக்கு தொடரப்பட்டுள்ளது. இந்த வழக்கு இன்று (டிச.,04) விசாரணைக்கு வந்தது. அப்போது அன்புமணி, ராமதாஸ் ஆகிய இருதரப்பும் தங்களது வாதங்களை முன்வைத்தது. இதற்கு பதில் அளித்து தேர்தல் கமிஷன் கூறியதாவது: பாமகவில் தலைமை பிரச்சனை உருவாகி உள்ளது. அதனால் சின்னம் ஒதுக்க முடியாது. அன்புமணிக்கோ, ராமதாஸ் தரப்புக்கோ பாமக சின்னத்தை ஒதுக்க முடியாது. இருதரப்புக்கு இடையே பிரச்சனை நீடித்தால், பாமகவின் மாம்பழம் சின்னம் முடக்கி வைக்கப்படும். இருதரப்பும் பிரச்னைக்குரியதாக இருந்தால் தேர்தல் கமிஷன் படிவம் ஏ மற்றும் படிவம் பி.,யில் இரு தரப்பு கையெழுத்து போடுவதை ஏற்காமல் சின்னமும் முடக்கி வைக்கப்படும். எங்களிடம் உள்ள ஆவணங்களின் அடிப்படையில் தான் அன்புமணி பாமக தலைவராக ஏற்கிறோம். இதில் பிரச்சனை இருக்கிறது என்றால் உரிமையியல் நீதிமன்றத்தை நாடலாம். இவ்வாறு தேர்தல் ஆணையம் கூறியுள்ளது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்