திருச்சி மலைக்கோட்டை கீழ ஆண்டாள் வீதியில் உள்ள ஒரு வீட்டில் இருந்து கடுமையான துர்நாற்றம் வீசியது. இதுகுறித்த தகவலின்பேரில் திருச்சி கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று வீட்டின் கதவை திறந்து உள்ளே சென்றனர். அங்கு 50 வயது மதிக்கத்தக்க ஆண் ஒருவர் அழுகிய நிலையில் பிணமாக கிடந்தார். அவரது உடலை போலீசார் வெளியே எடுக்க முயன்றனர். அப்போது அந்த வீட்டில் இருந்த வளர்ப்பு நாய் எஜமானர் உடலை எடுக்க விடாமல் குரைத்துக் கொண்டே இருந்தது. ஒரு வழியாக அந்த நாயை விரட்டிவிட்டு இறந்தவர் உடலை மீட்டு வெளியே கொண்டு வந்தனர். பின்னர், இதுகுறித்து நடத்தப்பட்ட விசாரணையில், இறந்த நபர் மதியழகன் என்பதும், தாயுடன் வசித்து வந்ததும் தெரிய வந்தது. சமீபத்தில் அவரது தாய் இறந்து விடவே, மதியழகன் மனம் உடைந்து காணப்பட்டதாக தெரிகிறது. இதனால், அவர் உடல்நிலை சரியில்லாமல் போனது. அவரை கவனிக்க ஆள் இல்லாததால் உயிரிழந்ததும் தெரியவந்தது. பின்னர் , மதியழகனின், உடல் அவரது தம்பியிடம் ஒப்படைக்கப்பட்டது. மரணமடைந்த எஜமானர் உடலை எடுக்க விடாமல் நாய் குரைத்த சம்பவம் அங்கிருந்தவர்களை நெகிழ்ச்சி அடையச் செய்தது.

Comments are closed, but trackbacks and pingbacks are open.