Rock Fort Times
Online News

திருச்சி எல்ஃபின் நிறுவன மோசடி வழக்கில் தலை மறைவாக இருந்த முக்கிய ஏஜெண்ட் சிக்கினார்…!

திருச்சி, மன்னார்புரத்தை தலைமையிடமாக கொண்டு கரூர், மதுரை, விருதுநகர், சிவகங்கை, ராமநாதபுரம், திருப்பூர், நெல்லை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களிலும் புதுச்சேரியிலும் எல்ஃபின் என்கிற நிறுவனம் செயல்பட்டு வந்தது. ராஜா மற்றும் ரமேஷ் ஆகிய இரண்டு சகோதரர்கள் அந்த நிறுவனத்தை நடத்தி வந்தனர். இந்த நிறுவனத்தின் கீழ் பல்வேறு துணை நிறுவனங்களும் செயல்பட்டு வந்தன. இந்த நிறுவனத்தில் ஒருமுறை பணம் செலுத்தினால் இரட்டிப்பாக கிடைக்கும், வெளிநாட்டு சுற்றுலா அழைத்துச் செல்லப்படுவார்கள் என்பன போன்ற கவர்ச்சிகரமான விளம்பரங்களை அள்ளி வீசினர். இதனால், தமிழ்நாடு மற்றும் புதுச்சேரியில் ஆயிரக்கணக்கான மக்கள் இந்த நிறுவனத்தில் லட்சக்கணக்கில் முதலீடு செய்தனர். இதனால், கோடிக்கணக்கில் பணம் குவிந்தது. ஆனால், முதிர்ச்சி காலம் முடிந்த பிறகும் பணத்தை திருப்பிக் கொடுக்காமல் ஏமாற்றினர். இதனால், பணத்தை செலுத்தி ஏமாந்த முதலீட்டாளர்கள் போலீசில் புகார் அளித்தனர்.
புகார்களின் அடிப்படையில் திருச்சி பொருளாதார குற்றப்பிரிவு அதிகாரிகள் விசாரணை நடத்தி இந்த நிறுவனத்தின் முக்கிய நிர்வாகிகளை கைது செய்தனர். பலர் தலைமறைவாகினர். அவர்களை போலீசார் தேடி வந்த நிலையில் நேற்று இந்த நிறுவனத்தின் முக்கிய ஏஜெண்டுகளில் ஒருவராக இருந்த கரூரை சேர்ந்த வினோத் குமார் (47) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் நேற்று கைது செய்தனர். அவரிடம் நடத்தப்பட்ட விசாரணையின் அடிப்படையில் எல்பின் நிறுவனத்தின் ஏஜெண்ட்களில் ஒருவரான திருச்சியை சேர்ந்த விஜய் (எ) தங்கவேல் (40 ) என்பவரை பொருளாதார குற்றப்பிரிவு போலீசார் இன்று( மார்ச் 19) கைது செய்தனர். இவர் திருச்சி மற்றும் புதுக்கோட்டை பகுதிகளில் சுமார் 150 முதலீட்டாளர்களிடமிருந்து ரூ.7 கோடி பணம் வசூல் செய்தது தெரிய வந்துள்ளது. 2022 ஆம் ஆண்டு முதல் தலைமறைவாக இருந்த விஜய் தற்பொழுது கைது செய்யப்பட்டுள்ளார். அவரிடம் தொடர்ந்து விசாரணை நடத்தப்பட்டு வருகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்