திருப்புகழை உலகிற்கு அளித்த அருணகிரிநாதருக்கு முருகப்பெருமான் அருள்பாலித்த திருத்தலமான வயலூர் முருகன் கோயில், ஏழாம் படை வீடு என்றும் அழைக்கப்படுகிறது. வள்ளி, தெய்வானை சமேதராக சுப்பிரமணிய சுவாமி அருள்புரிவதால் இந்த கோயிலில் திருமணம் செய்து கொள்வது சிறப்பு வாய்ந்ததாக கருதப்படுகிறது. இக்கோயிலில் வைகாசி விசாகம், கந்தசஷ்டி, தைப்பூசம், பங்குனி உத்திரம் போன்ற விழாக்கள் கோலாகலமாக கொண்டாடப்பட்டு வருகின்றன. இத்தகைய சிறப்பு வாய்ந்த வயலூர் முருகன் கோயிலில் கும்பாபிஷேகம் முடிந்து புதுப்பொலிவுடன் காட்சி அளிக்கிறது. இந்தநிலையில் கோயிலில் கந்த சஷ்டி விழா நேற்று புதன்கிழமை தொடங்கியது. இதையொட்டி காலை 7 மணிக்கு கணபதி ஹோமம், அபிஷேகம் நடைபெற்றது. மாலை 6 மணிக்கு காப்பு கட்டும் வைபவம் நடைபெற்றது. இதன் தொடர்ச்சியாக இரவு 8 மணிக்கு சிங்காரவேலர், பச்சை மயில் வாகனத்தில் திருவீதி வரும் நிகழ்வு நடைபெற்றது. இந்த நிகழ்வில், ஏராளமான பக்தர்கள் கலந்து கொண்டு சுவாமி தரிசனம் செய்தனர். இரண்டாம் நாளான இன்று வியாழக்கிழமை காலை 11 மணிக்கு சண்முகார்ச்சனை நடைபெற்றது. இரவு 8 மணிக்கு சேஷ வாகனத்தில் வீதி உலா நடைபெறுகிறது. நாளை வெள்ளிக்கிழமை காலை கேடயத்தில் வீதி உலா, இரவு ரிஷப வாகனத்தில் வீதி உலா நடைபெறுகின்றன. நான்காம் திருநாளான சனிக்கிழமை இரவு 7 மணிக்கு அன்னவாகனதத்தில் எழுந்தருளும் சிங்கார வேலர், யானை முக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கும் நிகழ்வு நடைபெறும். ஞாயிற்றுக்கிழமை இரவு வெள்ளி மயில் வாகனத்தில் எழுந்தருளி, சிங்க முக சூரனுக்கு பெருவாழ்வு அளிக்கவுள்ளார். திங்கட்கிழமை இரவு ஆட்டுகிடா வாகனத்தில் எழுந்தருளி, சூரபத்மனுக்கு பெருவாழ்வு அளிக்கவுள்ளார். தொடர்ந்து முத்துக்குமாரசுவாமி வெள்ளி கேடயத்தில் எழுந்தருளி பக்தர்களுக்கு அருள்பாலிக்கிறார். விழாவின் முக்கிய நிகழ்வான திருக்கல்யாணம், 28-ம் தேதி (செவ்வாய்க்கிழமை) இரவு 7 மணிக்கு மேல் நடைபெறுகிறது. இதற்கான ஏற்பாடுகளை, கோயில் நிர்வாக அதிகாரி சக்திவேல், உதவி ஆணையர் லட்சுமணன் மற்றும் கோயில் நிர்வாகத்தினர், வயலூர் கிராம மக்கள் செய்து வருகின்றனர். இதேபோல, அனைத்து முருகன் கோயில்களிலும் கந்த சஷ்டி விழா தொடங்கியுள்ளது.

Comments are closed.