திருப்பரங்குன்றம் கோவில் மலை உச்சியில் இருக்கும் தீபத்தூணில் தீபம் ஏற்ற உயர் நீதிமன்ற மதுரை கிளை தனி நீதிபதி பிறப்பித்த உத்தரவை எதிர்த்து தமிழக அரசு தொடர்ந்த மேல்முறையீட்டு மனுவை நீதிபதிகள் தள்ளுபடி செய்தனர். திருப்பரங்குன்றம் மலை உச்சியில் உள்ள தீபத்தூணில் கார்த்திகை மகா தீபம் ஏற்ற வேண்டும் என மதுரை மாவட்டம், எழுமலை ராம ரவிக்குமார், அவரது ஆதரவு மனுதாரர்கள், சோலை கண்ணன் தாக்கல் செய்து இருந்த மனு மீது உயர் நீதிமன்ற மதுரை கிளை நீதிபதி ஜி.ஆர். சுவாமிநாதன், வழக்கமான இடங்களை தவிர தீபத்தூணிலும் கார்த்திகை தீபம் கோயில் நிர்வாகம் ஏற்ற வேண்டும் என உத்தரவிட்டார். இதை எதிர்த்து திருப்பரங்குன்றம் கோயில் செயல் அலுவலர் சார்பில் மேல் முறையீட்டு மனு தாக்கல் செய்யப்பட்டது. மேல் முறையீட்டு மனு மீது எந்த தகவலும் இல்லாததால் நேற்று தீபத்தூணில், தீபம் ஏற்றப்படவில்லை. இதனால் ஏமாற்றம் அடைந்த இந்து அமைப்பினர் தீபத்தூணில் தீபம் ஏற்ற முயன்றனர். அதற்கு போலீசார் அனுமதி மறுக்கவே இரு தரப்பினருக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. இந்தநிலையில் திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்றும் விவகாரத்தில் தமிழக அரசு தரப்பில் தாக்கல் செய்யப்பட்ட மேல்முறையீட்டு மனுவை சென்னை உயர் நீதிமன்ற மதுரை அமர்வு தள்ளுபடி செய்து உத்தரவிட்டது. நீதிமன்ற உத்தரவு முறையாக நடைமுறைப்படுத்தபடவில்லை என்பதாலேயே மனுதாரர் ராம.ரவிக்குமாரை மலை உச்சியில் தீபத்தை ஏற்ற தனி நீதிபதி ஜி.ஆர்.சுவாமிநாதன் உத்தரவிட்டிருந்தார். மாநில அரசு கடமையைச் செய்ய தவறியதாலேயே மத்திய தொழிற் பாதுகாப்புப் படை (CISF) மனுதாரர் உள்ளிட்டோரின் பாதுகாப்பிற்காக அவர்களுடன் செல்ல உத்தரவிடப்பட்டது. எனவே அரசின் மேல்முறையீட்டு மனு தள்ளுபடி செய்யப்படுவதாக நீதிபதிகள் ஜெயச்சந்திரன், கே.கே.ராமகிருஷ்ணன் அமர்வு உத்தரவிட்டது.

Comments are closed.