கள்ளக்குறிச்சி மாவட்டம், உளுந்தூர்பேட்டை அருகே உள்ள அஜிஸ் நகர் பகுதியை சேர்ந்தவர் முத்து. இவருடைய மனைவி தேவி. இவர்களது மகன் பிரவீன்குமார். நெய்வேலியில் உள்ள நிலக்கரி சுரங்க நிறுவனத்தில் முத்து பணியாற்றி வந்தார். இதன் காரணமான இவர் நெய்வேலி என்எல்சி பணியாளர்களுக்கான குடியிருப்பு பகுதியில் வசித்து வந்தார். அண்மையில் முத்து குடும்பத்துடன் உளுந்தூர்பேட்டை வந்திருந்தார்.
அங்குள்ள ஜிஎஸ்டி சாலையில் தனியார் பள்ளிகளுக்கு அருகில் உள்ள குளத்தில் இவருடைய மனைவி தேவி மற்றும் மகன் பிரவீன்குமார் ஆகிய இருவரும் சடலமாக மிதந்து உள்ளனர். அருகில் உள்ள மரத்தில் முத்துவும் தூக்கிட்ட நிலையில் சடலமாக தொங்கினார். அந்த வழியாக சென்றவர்கள் இதனை பார்த்து அதிர்ச்சி அடைந்து போலீஸாருக்கு தகவல் கொடுத்தனர். அதன்பேரில் உளுந்தூர்பேட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து குளத்தில் மிதந்த இருவரின் உடல்கள் மற்றும் தூக்கில் சடலமாக தொங்கிய முத்துவின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக உளுந்தூர்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இது தொடர்பாக வழக்கு பதிவு செய்து மனைவி, மகனை குளத்தில் தள்ளி கொலை செய்துவிட்டு முத்து தூக்கு போட்டு தற்கொலை செய்து கொண்டாரா? அல்லது அவர்களை யாராவது கொலை செய்தார்களா? இதற்கான காரணம் என்ன? என்பது குறித்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். ஒரே குடும்பத்தைச் சேர்ந்த 3 பேர் உயிரிழந்த சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் அதிர்ச்சியையும், சோகத்தையும் ஏற்படுத்தி உள்ளது.

Comments are closed.