திருச்சி மாநகராட்சி அலுவலகத்தை முற்றுகையிட்டு தரைக்கடை வியாபாரிகள் போராட்டம்: போலீசாரிடையே தள்ளு-முள்ளு…!
திருச்சி சத்திரம் பஸ் நிலையம், காந்தி மார்க்கெட், சுப்பிரமணியபுரம் பகுதிகளில் போக்குவரத்துக்கு இடையூறாக அமைக்கப்பட்டிருந்த தரைக்கடைகள் அகற்றப்பட்டன. இதனால், வியாபாரிகள் தங்களது வாழ்வாதாரத்தை இழந்து தவித்து வருகின்றனர். இந்நிலையில் திருச்சி மாநகராட்சி நிர்வாகத்தையும், காவல்துறையினரையும் கண்டித்து, சிஐடியு தொழிற்சங்கத்தினர், மாநகராட்சி மைய அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர். மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளர் ராஜா, சிஐடியு மாவட்ட செயலாளர் ரங்கராஜன், தரைக்கடை வியாபாரிகள் சங்கம் கணேசன் ஆகியோர் தலைமை தாங்கினர். அவர்களை இரும்பு தடுப்புகளை கொண்டு போலீசார் தடுத்து நிறுத்தியதால் போலீசாருக்கும்- போராட்டக்காரர்களுக்கும் இடையே தள்ளுமுள்ளு ஏற்பட்டது. அப்போது போராட்டக்காரர்கள் தங்களை மாநகராட்சி அலுவலகத்திற்குள் செல்ல அனுமதிக்குமாறு கேட்டனர். ஆனால் அதற்கு போலீசார் அனுமதி மறுத்தனர். இதனால், சாலையோர தடைக்கடை வியாபாரிகளின் வாழ்வாதாரத்தை பாதுகாப்பதற்காக கொண்டு வரப்பட்ட சட்டத்தை நடைமுறைப்படுத்த வேண்டும். தரைக்கடை வியாபாரிகளை அடையாளம் காண முறையான கணக்கெடுப்பை நடத்த வேண்டும். அவர்களுக்கு அடையாள அட்டை வழங்கி முறைப்படுத்த வேண்டும். தரைக்கடை வியாபாரிகளிடம் மாமுல் வசூல் செய்யும் மாமன்ற உறுப்பினர்கள் மீதும், காவல்துறையினர் மீதும் தமிழக அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். தரைக்கடை வியாபாரிகளுக்கு சொந்தமான கடைகளையும் அதில் உள்ள பொருட்களையும் சேதப்படுத்திய காவல்துறையினர் மீதும், மாநகராட்சி அதிகாரிகள் மீதும் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி முழக்கம் எழுப்பி விட்டு அங்கிருந்து கலைந்து சென்றனர்.


Comments are closed.