Rock Fort Times
Online News

போலி ஆவணங்கள் மூலம் பத்திரப்பதிவு செய்ததால் அரசுக்கு கோடிக்கணக்கில் இழப்பு… * திருச்சி பதிவுத்துறை டிஐஜி ராமசாமி “சஸ்பெண்ட்”…!

திருச்சி பதிவுத்துறை டிஐஜியாக இருப்பவர் ராமசாமி. இவர்மீது பல்வேறு முறைகேடு புகார்கள் எழுந்ததால் விசாரணைக்கு உத்தரவிடப்பட்டிருந்தது. இந்தநிலையில், அவர் மீது ஏராளமான புகார்கள் எழுந்ததால், அவரை சஸ்பெண்ட் செய்து, பதிவுத்துறை ஐஜி தினேஷ் ஆலிவர் பொன்ராஜ் உத்தரவிட்டார். இதுகுறித்து பதிவுத்துறை  வட்டாரத்தில் விசாரித்தபோது, திருச்சி பதிவுத்துறையில் துணை மண்டல பதிவுத்துறைத் தலைவராக இருப்பவர் ராமசாமி. இவர் மதுரையில் பலகோடி மதிப்புள்ள சொத்தினை போலியாக பதிவு செய்ய துணைபோனதாக குற்றச்சாட்டு எழுந்தது. இதுதொடர்பான வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம் மதுரை கிளை, இந்த விவகாரத்தில் பதிவுத்துறை டிஐஜி ராமசாமி மீது வழக்குப்பதிவு செய்ய உத்தரவிட்டது. இதையடுத்து தலைமறைவான ராமசாமி, நீதிமன்றத்தில் முன் ஜாமீன் பெற்றார். இதையடுத்து அவர்மீது மீண்டும் குற்றச்சாட்டுக்கள் எழுந்தன. 1965ல் சார்பதிவாளராக பணியில் சேர்ந்த ராமசாமி, இதுவரை பல்வேறு முறைகேடுகளில் ஈடுபட்டு பல கோடி மதிப்புள்ள சொத்துக்களை போலி ஆவணங்கள் மூலம் சேர்த்துள்ளதாக கூறப்படுகிறது. மேலும், தேசிய நெடுஞ்சாலையில் பல நூறுகோடி மதிப்புள்ள நிலங்களை உறவினர் பெயரில் அன்றே வாங்கி குவித்துள்ளார். ராமசாமி, சார்பதிவாளர காலம் முதல் உதவி பதிவுத் துறைத் தலைவர் காலம் வரை கிட்டத்தட்ட 47 ஆண்டுகளாக அரசாணைகளை தகர்த்து, விதிகளை உடைத்து தொடர்ந்து பத்திரங்களை பதிவு செய்து கல்லாகட்டி வந்துள்ளார். இவர், திருப்பூரில் உதவி ஐஜியாக பணியாற்றிய காலத்தில்தான் போலி ரசீது மூலம் பத்திரப்பதிவு நடைபெற்று, பல கோடி ரூபாய் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்பட்டது தெரியவந்தது. இது குறித்து போலீசில் புகார் செய்யப்பட்டது. 18 பேர் மீது குற்றம்சாட்டப்பட்டது. இவ்வாறு பல்வேறு குற்றச்சாட்டுக்களுக்கு உள்ளான இவர், தற்போது டிஐஜியாக பதவி உயர்வு பெற்று மீண்டும் தனது ஜகஜால வித்தைகளை தொடர்ந்து வந்தார். தற்போது அவரை பணி இடைநீக்கம் ( சஸ்பெண்ட்) செய்து நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என்றனர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்