2026 சட்டமன்ற தேர்தலுக்கு அதிமுக தீவிரமாக ஆயத்தமாகி வருகிறது. இதற்காக சட்டமன்ற தொகுதி வாரியாக முன்னாள் அமைச்சர்கள் நியமிக்கப்பட்டுள்ளனர். அவர்கள் தங்களுக்கு ஒதுக்கப்பட்ட தொகுதிகளுக்கு சென்று அந்தந்த மாவட்ட செயலாளர்கள் மற்றும் நிர்வாகிகளுடன் ஆலோசனை நடத்தி வருகிறார்கள். அவர்களுடன் கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி வீடியோ கான்பரன்ஸ் மூலம் அடிக்கடி சந்தித்து ஒவ்வொரு மாவட்டத்தின் பலம், பலவீனம் என்ன? என்பது குறித்து கேட்டறிந்து வருகிறார். அப்போது சில தொகுதி பொறுப்பாளர்கள், நமது கட்சி நிர்வாகிகள் சிலர் ஆளுங்கட்சிக்கு துணை போகிறார்கள் என்று போட்டுக் கொடுத்து விட டென்ஷனான எடப்பாடி பழனிச்சாமி ஆளுங்கட்சிக்கு துணை போகிறவர்கள் கட்சியிலிருந்து நீக்கப்படுவார்கள் என்று அதிரடித்தார். இது ஒருபுறம் இருக்க எடப்பாடி பழனிச்சாமிக்கும், செங்கோட்டையனுக்கும் நீறு பூத்த நெருப்பு போல இருந்த விவகாரம் தற்போது பூதாகரமாகி இருக்கிறது. அத்திக்கடவு- அவினாசி திட்டத்தை செயல்படுத்தியதற்காக எடப்பாடி பழனிச்சாமிக்கு கோவையில் நடந்த பாராட்டு விழாவில் எம்ஜிஆர், ஜெயலலிதா படம் இல்லை எனக் கூறி செங்கோட்டையன் அந்த விழாவை புறக்கணித்தார். இதுதான் பிரச்சனைக்கு முக்கிய காரணமாக பார்க்கப்பட்டது.
அதனைத்தொடர்ந்து முன்னாள் அமைச்சர் வேலுமணி இல்ல திருமண விழாவில் இபிஎஸ் வருவதற்கு முன்பாகவே செங்கோட்டையன் வந்துவிட்டு சென்றுவிட்டார். இதனால் அவர் எடப்பாடி பழனிசாமி உடனான சந்திப்பை தவிர்க்கிறார் என்று பேசப்பட்டது. ஆனால், இதனை மறுத்த செங்கோட்டையன் வீடியோ கான்பரன்ஸ் மூலம் இபிஎஸ் ஆலோசனை கூட்டத்தில் கட்சி நிர்வாகிகளுடன் பங்கேற்றார். இந்தநிலையில் தமிழக பட்ஜெட் கூட்டத் தொடர் நேற்று(14-03-2025) தொடங்கிய நிலையில் அதிமுக எம்எல்ஏக்கள் கூட்டத்தை எடப்பாடி பழனிச்சாமி கூட்டி இருந்தார். ஆனால், அந்த கூட்டத்தில் செங்கோட்டையன் பங்கேற்கவில்லை. அதேபோல, இன்று( மார்ச் 15) வேளாண் பட்ஜெட் தாக்கல் செய்யப்படுவதற்கு முன்னதாக செங்கோட்டையன், சபாநாயகர் அறைக்கு சென்று சபாநாயகர் அப்பாவுவை சந்தித்து பேசியிருந்தார். செங்கோட்டையனின் இந்த தனிமை சந்திப்பு மீண்டும் கட்சியில் சலசலப்பை ஏற்படுத்தி இருக்கிறது. சபாநாயகரை தனியாக சந்தித்தது எதற்காக என்று தெரியவில்லை. அவர் அதிமுக தலைமையை விரும்பாமல் ஒதுங்கி, ஒதுங்கி செல்கிறார் என்று அரசியல் நோக்கர்களால் பார்க்கப்படுகிறது. அவர் அதிமுகவில் இருந்து வேறு எங்கும் செல்ல நினைக்கிறாரா? என்றும் யூகிக்க முடியவில்லை.
இதுதொடர்பாக அதிமுக பொதுச் செயலாளரும், சட்டமன்ற எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமியிடம் செய்தியாளர்கள் கேள்வி எழுப்பிய போது டென்ஷனான அவர், அதை அவரிடம் போய் கேளுங்கள் சார்… தனிப்பட்ட பிரச்சினையை எல்லாம் இங்கு பேசாதீர்கள். எங்களுக்கு 62 எம்.எல்.ஏ.க்கள். ஆனால் இங்கு எத்தனை பேர் வந்திருக்கிறோம் பாருங்க. அவரவர்களுக்கு வேலை இருக்கும். இது சுதந்திரமாக செயல்படக் கூடிய கட்சி. திமுக போல அடிமையாட்கள் இங்கு கிடையாது. நான் என்றைக்கும் யாரையும் எதிர்பார்த்தது கிடையாது. நான் ஒரு சாதாரண தொண்டன், தலைவன் கிடையாது. யார் எங்கு வேண்டுமானாலும் போகலாம். எங்களுக்கு ஒரே எதிரி திமுக. மற்ற கட்சிகள் எல்லாம் எங்களுக்கு எதிரியே கிடையாது என கூறி முடித்தார். செங்கோட்டையனின் மாஸ்டர் பிளான் என்ன என்பதுதான் புரியவில்லை. அதற்கு விரைவில் பதில் கிடைத்துவிடும் என்பது மட்டும் உண்மை.
Comments are closed.