Rock Fort Times
Online News

திருச்சி, சூரியூரில் புதிதாக திறக்கப்பட்ட மைதானத்தில் முதல் ஜல்லிக்கட்டு போட்டி… சீறி வந்த காளைகளை அடக்கிய காளையர்கள்!

திருச்சி மாவட்டம், திருவெறும்பூர் தொகுதிக்கு உட்பட்ட சூரியூரில் ஒவ்வொரு ஆண்டும் தை இரண்டாம் நாளான மாட்டுப் பொங்கல் அன்று ஜல்லிக்கட்டு விமரிசையாக நடைபெறும். சூரியூர் ஜல்லிக்கட்டு போட்டியில் திருச்சி மட்டுமல்லாது தஞ்சாவூர், அரியலூர், புதுக்கோட்டை, சிவகங்கை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களை சேர்ந்த காளைகளும், மாடுபிடி வீரர்களும் கலந்து கொள்வார்கள். முன்பு ஊர் தெருவிலும், பிறகு மந்தையிலும் நடைபெற்று வந்த ஜல்லிக்கட்டு போட்டி கடந்த சில ஆண்டுகளாக ஊர் குளக்கரையில் நடைபெற்று வந்தது. இந்த நிலையில் அங்கு நிரந்தர ஜல்லிக்கட்டு மைதானம் தேவை என அந்த ஊர் மக்கள் கோரிக்கை விடுத்து இருந்தனர். அங்கு ஜல்லிக்கட்டு ஸ்டேடியம் அமைக்க தமிழ்நாடு அரசு ஒப்புதல் வழங்கியது. அதனை அடுத்து கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம் சூரியூரில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்திற்கு துணை முதல்வர் உதயநிதி ஸ்டாலின் அடிக்கல் நாட்டினார். அங்கு பணிகள் நிறைவடைந்த நிலையில் ஜல்லிக்கட்டு ஸ்டேடியத்தை துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலின் நேற்று திறந்து வைத்தார். இருபுறமும் 800 முதல் 900 பேர் அமரக்கூடிய வகையில் கேலரிகள் அமைக்கப்பட்டுள்ளன. இந்நிலையில், சூரியூரில் ஜல்லிக்கட்டு போட்டி புதிதாக திறக்கப்பட்ட ஜல்லிக்கட்டு மைதானத்தில் இன்று(16-01-2026) நடைபெற்றது. மாடுபிடி வீரர்கள் மாவட்ட ஆட்சியர் வே.சரவணன் முன்னிலையில் உறுதிமொழி ஏற்க, ஜல்லிக்கட்டு போட்டி தொடங்கியது. ஜல்லிக்கட்டு போட்டியில் 850 காளைகள், 600 மாடுபிடி வீரர்கள் பங்கேற்றனர். வாடி வாசலில் இருந்து சீறிப்பாய்ந்து வந்த காளைகளை மாடு பிடி வீரர்கள் போட்டி போட்டு அடக்கினர். சில காளைகள் அவர்களது பிடியில் சிக்காமல் திமிறி கொண்டு ஓடின. காளைகளை அடக்கிய வீரர்களுக்கு பல்வேறு பரிசுகள் வழங்கப்பட்டன. அதேபோல வீரர்களின் பிடியில் சிக்காமல் ஓடிய காளைகளின் உரிமையாளருக்கும் பரிசு பொருட்கள் வழங்கப்பட்டன. சிறந்த மாடுபிடி வீரருக்கு திருவெறும்பூர் சட்டமன்ற உறுப்பினரும், பள்ளி கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி சார்பில் கார் பரிசாக வழங்கப்படுவதாக அறிவிக்கப்பட்டது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்