இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் இணையதளங்களில் வெளியிடப்படும்…- தமிழக தலைமை தேர்தல் அதிகாரி…!
இறந்தவர்கள், இடம் பெயர்ந்தவர்களின் விவரங்கள் மாவட்ட இணைய தளங்களில் வெளியிடப்படும் என்று தமிழக தலைமை தேர்தல் அதிகாரி அர்ச்சனா பட்நாயக் தெரிவித்துள்ளார். இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில், இந்தியத் தேர்தல் ஆணையத்தின் அறிவுறுத்தலின்படி தமிழ்நாடு முழுவதும் வாக்காளர் பட்டியல் சிறப்பு தீவிர திருத்தப் பணி நடைபெற்று வருகின்றது. இதன் வரைவு வாக்காளர் பட்டியல் 19-ந் தேதி வெளியிடப்பட உள்ளது. இந்த நடவடிக்கையானது, எந்த தகுதியான வாக்காளரும் வாக்காளர் பட்டியலில் இருந்து விடுபட்டு விடக்கூடாது என்ற தேர்தல் ஆணையத்தின் உறுதிப்பாட்டினைப் பின்பற்றும் வகையில் மேற்கொள்ளப்பட்டுள்ளது. இந்த நடவடிக்கை குறிப்புகள் வாக்குச்சாவடி நிலை அலுவலர்களின் செயலியில் பதிவேற்றம் செய்யப்பட்டுள்ளது. இந்த பட்டியலில் இடம்பெற்றுள்ள ஒவ்வொரு வாக்காளரின் உண்மையான நிலையை உறுதி செய்து கொள்வதற்காகவும். வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீட்டிற்கு முன்பே ஏதேனும் பிழைகள் இருப்பின் அவற்றை திருத்துவதற்காகவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளது. 19-ந் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்ட பின்னர் இறந்தவர்கள், கண்டறிய இயலாத மற்றும் முகவரியில் இல்லாத வாக்காளர்கள், இடம் பெயர்ந்தவர்கள், இரட்டை பதிவு செய்த வாக்காளர்கள் பட்டியலில் இடம்பெற்றுள்ள வாக்காளர்களின் விவரங்களை அணுகுவதற்கான வசதி, அந்தந்த மாவட்ட இணையதளங்களில் வெளியிடப்படும். பொதுமக்கள் தங்களது விவரங்களை தேவைப்படின் இந்த பட்டியலில் சரிபார்த்துக் கொள்ளலாம். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Comments are closed.