திருச்சி மாவட்டத்தில் கோவில் சுவர்களில் உள்ள கல்வெட்டுகளை நகல் எடுக்கும் பணியில் ஈடுபட்ட தொல்லியல் துறை…!
திருச்சி மாவட்டத்தில் உள்ள ஸ்ரீரங்கம் மற்றும் மண்ணச்சநல்லூர் தாலுகாவில் உள்ள இரண்டு கோவில் களின் சுவர்களில் உள்ள முக்கியமான கல்வெட்டுகளை நகல் எடுக்கும் பணியில் இந்திய தொல்லியல் துறை ஈடுபட்டுள்ளது. தேனி மாவட்டத்தில் உள்ள பெரியகுளம் தாலுகாவில் உள்ள இரண்டு கோவில்களில் இதேபோன்ற பணியை முடித்துள்ள அவர்கள் மண்ணச்சநல்லூர் தாலுகா, திருவாசியில் உள்ள மேட்டுறை வரதேஸ்வரர் கோவில் மற்றும் ஸ்ரீரங்கம் தாலுகா, பெரிய கருப்பூர் கிராமத்தில் உள்ள அக்னீஸ்வரர் கோவில் சுவர்களில் உள்ள தமிழ் கல்வெட்டுகள் நகல் எடுக்கப்பட்டு வருவதாக உதவி கல்வெட்டு நிபுணர் பி.சாருமதி தெரிவித்தார். மேப்லிதோ காகிதங்களில் நகல் எடுக்கப்படுகின்றன.
அவ்வாறு எடுக்கப்பட்டதில் திருவாசி கோவிலில் உள்ள கல்வெட்டை படித்ததில், அது குலோத்துங்க சோழன் காலத்தைச் சேர்ந்தது என்பது தெரியவந்தது. மேலும் ஆய்வு செய்த பின்னரே சரியான ஆண்டு கண்டறியப்படும்
என சாருமதி கூறினார். மேலும், பெரிய கருப்பூரில் உள்ள கல்வெட்டுகள் 14 ஆம் நூற்றாண்டின் விஜயநகர சாம்ராஜ்யத்தைச் சேர்ந்தவை என்றும், கோயில்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் பற்றிய குறிப்புகள் இருப்பதாகவும் அவர் கூறினார்.

Comments are closed.