திருச்சி விமான நிலையத்தில் நாம் தமிழர் கட்சி- மதிமுகவினர் மோதல் வழக்கில் சீமான் உட்பட அனைவரையும் விடுவித்து நீதிமன்றம் தீர்ப்பு…!
கடந்த 2018-ம் ஆண்டு, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மற்றும் மதிமுக பொதுச்செயலாளர் வைகோ இருவரும் சென்னையிலிருந்து ஒரே விமானத்தில் திருச்சி விமான நிலையம் வந்தடைந்தனர். அவர்களை வரவேற்க இரு கட்சி நிர்வாகிகள் மற்றும் தொண்டர்கள் விமான நிலைய வாயிலில் குவிந்திருந்தனர். அப்போது இருதரப்பு கட்சி நிர்வாகிகளுக்கு இடையே வாக்குவாதம் ஏற்பட்டு மோதலாக மாறியது. இந்த மோதல் தொடர்பாக இரு தரப்பை சேர்ந்த 19 பேர் மீது ஏர்போர்ட் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் மீதும் வழக்கு பதிவு செய்யப்பட்டது. இந்த வழக்கின் விசாரணை திருச்சி மாவட்ட இரண்டாவது கூடுதல் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது. வழக்கு விசாரணை நிறைவடைந்த நிலையில் இன்று (ஜூலை 19) தீர்ப்பளிக்கப்படும் என்று நீதிபதி அறிவித்து இருந்தார். அதன்படி, இந்த வழக்கில் நீதிபதி கோபிநாத் தீர்ப்பளித்தார். அதில் வழக்கில் தொடர்புடைய சீமான் உள்ளிட்ட 19 பேரையும் விடுவித்து தீர்ப்பளித்தார். இந்த மோதல் தொடர்பாக மதிமுகவினர் கொடுத்த புகாரில் சீமான் உள்ளிட்டோர் மீது ஒரு வழக்கு பதிவு செய்யப்பட்டது அந்த வழக்கு கடந்த 2022 ம் ஆண்டு சீமான் உள்ளிட்டோர் விடுதலை செய்யப்பட்டிருந்த நிலையில், இருதரப்பு மீதும் போலீசார் பதிவு செய்யப்பட்ட வழக்கிலும் அனைவரும் விடுதலை செய்யப்பட்டிருப்பது குறிப்பிடத்தக்கது.

Comments are closed.