தமிழகத்தில் விரைவில் சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ள நிலையில் திருச்சி, சிறுகனூரில் மார்ச் 9-ந்தேதி தி.மு.க. சார்பில் 12-வது மாநில மாநாடு பிரம்மாண்டமாக நடைபெறுகிறது. இதில் 10 லட்சம் தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் கலந்து கொள்வார்கள் என எதிர்பார்க்கப்படுகிறது. இதற்காக பிரம்மாண்ட மாநாட்டு திடல் அமைக்கப்பட்டு வருகிறது. நுழைவு வாயில்களும் அமைக்கப்பட்டு வருகின்றன. லட்சக்கணக்கான தொண்டர்கள் மற்றும் நிர்வாகிகள் அமருவதற்கான நாற்காலிகள் போடும் பணி நடந்து வருகிறது. தொண்டர்கள் அமர சிவப்பு நிறத்தில் கம்பளங்களும் விரிக்கப்பட்டு உள்ளன. மாநாட்டின் மூன்று பக்கங்களிலும் தி.மு.க. அரசின் திட்டங்களை பிளக்ஸ் பேனர்களாக வைத்துள்ளனர். அதில் அண்ணா, பெரியார், கலைஞர், மு.க.ஸ்டாலின், உதயநிதி ஸ்டாலின் ஆகியோரின் படங்கள் இடம்பெற்றுள்ளது.

இந்தநிலையில், இன்று(மார்ச் 6) தி.மு.க. முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு மாநாட்டு பணிகளை பார்வையிட்டு ஆய்வு செய்தார். பின்னர் அவர் நிருபர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறியதாவது:- திருச்சி, சிறுகனூரில் மார்ச் 9-ந்தேதி மதியம் 3 மணிக்கு கலை நிகழ்ச்சியுடன் மாநாடு தொடங்க உள்ளது. 5.30 மணிக்கு தமிழ்நாடு முதலமைச்சரும், தி.மு.க. தலைவருமான மு.க.ஸ்டாலின், 100 அடி கொடிக்கம்பத்தில் கழக கொடியேற்றி மாநாட்டை தொடங்கி வைக்க உள்ளார். கடந்த தேர்தலின்போது இதே இடத்தில் மகளிர் உரிமைத்தொகை உள்ளிட்ட 7 வாக்குறுதிகளை தலைவர் மு.க.ஸ்டாலின் அறிவித்தார். அது தேர்தலில் மிகப்பெரிய திருப்புமுனையாக அமைந்தது. அதே போன்று இந்த மாநாட்டிலும் பல்வேறு புதிய அறிவிப்புகளை வெளியிடுவார் என எதிர்பார்க்கின்றோம். ஏற்கனவே அறிவித்த வாக்குறுதிகளை எப்படி நிறைவேற்றி இருக்கிறோம் என்பதை நீங்களே பார்த்திருப்பீர்கள். அதேபோன்று புதிய அறிவிப்புகளோடு சிறந்த மாநாடாக இது அமையும். நிதிநிலைக்கு ஏற்ப என்ன செய்ய முடியுமோ அதனை தான் அறிவிக்க முடியும். அறிவித்துவிட்டு செய்யாமல் இருந்தால் சரியாக இருக்காது. எதை செய்ய முடியுமோ அதை முதலமைச்சர் அறிவிப்பார். இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது மாவட்டச் செயலாளர்கள் வைரமணி, காடுவெட்டி தியாகராஜன் எம்.எல்.ஏ., மாநகராட்சி மேயர் மு.அன்பழகன், ஸ்டாலின்குமார் எம்.எல்.ஏ., பொருளாளர் துரைராஜ், பொதுக்குழு உறுப்பினர் காஜாமலை விஜய், அவைத்தலைவர் அம்பிகாபதி, குடமுருட்டி சேகர், பகுதி செயலாளர் கமால் முஸ்தபா மற்றும் பலர் உடனிருந்தனர்.

Comments are closed.