Rock Fort Times
Online News

தமிழகத்திற்கு எந்த நிதியும் ஒதுக்காமல் தொடர்ந்து புறக்கணித்து வருகிறது மத்திய அரசு- அமைச்சர் கே.என்.நேரு காட்டம்…!

மத்திய அரசின் பட்ஜெட்டில் தமிழ்நாடு புறக்கணிக்கப்படுவதை கண்டித்து தமிழகம் முழுவதும் தி.மு.க.சார்பில் கண்டன பொதுக்கூட்டம் நடத்தப்படும் என அறிவிக்கப்பட்டு இருந்தது. அதன்படி, திருச்சி புத்தூர் நால்ரோடு பகுதியில் மத்திய மாவட்ட தி.மு.க. சார்பில் மத்திய அரசின் பட்ஜெட்டை கண்டித்து கண்டன பொதுக்கூட்டம் மாவட்டச் செயலாளர் வைரமணி தலைமையில் நடைபெற்றது. மாநகர செயலாளரும், மாநகராட்சி மேயருமான மு.அன்பழகன் முன்னிலை வகித்தார். கூட்டத்தில் கழக முதன்மைச் செயலாளரும், நகராட்சி நிர்வாகத்துறை அமைச்சருமான கே.என்.நேரு, திமுக துணை பொதுச் செயலாளர் ஆ.ராசா எம்.பி.ஆகியோர் கலந்து கொண்டு பேசினர். பகுதிச் செயலாளர் கவுன்சிலர் நாகராஜ் வரவேற்றார்.

கூட்டத்தில் அமைச்சர் கே.என்.நேரு பேசியதாவது:-ஆ.ராசா எம்.பி. பல்வேறு இன்னல்களை கடந்து வந்துள்ளார். இன்று அவர் பல உயரங்களுக்கு சென்றுள்ளார். அவரின் வளர்ச்சிக்கு நானும் ஒரு அணிலாக இருந்துள்ளேன் என்பதை நினைக்கும் போது பெருமையாக உள்ளது. திமுக வை வெற்றி கொள்ள முடியாததால் திமுகவை கண்டாலே மத்திய அரசு வெறுப்பாக இருக்கிறது.பட்ஜெட்டில் தமிழகத்திற்கு மத்திய அரசு ஒரு ரூபாய் கூட ஒதுக்கவில்லை. தமிழ்நாடு பேரிடரால் பாதிக்கப்பட்ட போதும் அதற்காக கேட்ட நிதியையும் ஒதுக்கவில்லை. கல்விக்கும் ஒதுக்க வேண்டிய நிதியை ஒதுக்காமல் இருக்கிறார்கள்.பா.ஜ.க.எத்தனை முயற்சி எடுத்தாலும் யாருடன் கூட்டணி அமைத்து வந்தாலும் ஒரு போதும் அவர்களால் வெற்றி பெற முடியாது. தமிழ்நாட்டில் அனைத்து தேர்தல்களிலும் திமுக தான் வெற்றி பெறும் .இவ்வாறு அவர் பேசினார்.

திமுக துணை பொதுச்செயலாளர் ஆ.ராசா எம்.பி. பேசுகையில், நான் உயரத்திற்கு செல்ல அணிலாக இருந்தேன் என அமைச்சர் கே.என்.நேரு குறிப்பிட்டார். அவர் அணில் அல்ல. எனக்கு ஆதார சுருதியே அவர் தான்.நான் நாடாளுமன்றத்தில், ஐநா மன்றத்தில் பேசியுள்ளேன் என குறிப்பிட்டார். பறவை எவ்வளவு உயரத்தில் பறந்தாலும் அதன் கூடு தரையில் இருப்பதை பறவை எப்படி மறக்காதோ அதேபோலதான் நான் எவ்வளவு உயர பறந்தாலும் அமைச்சர் கே.என்.நேருவை எப்போதும் மறக்க மாட்டேன். 2014 ம் ஆண்டு மோடி அரசு ஆட்சிக்கு வந்த பின் தொடர்ந்து அவர்கள் தமிழ்நாட்டை வஞ்சித்து வருகிறார்கள்.இந்தியாவில் ஒருமைப்பாடு வேண்டும் என தான் திமுக எப்போதும் விரும்புகிறது. பாகிஸ்தான் படையெடுத்து வந்த போது இந்தியாவின் ஒருமைப்பாட்டிற்காக ரூ.100 கோடி வழங்கியவர் கலைஞர். நம்மை பார்த்து பிரிவினைவாதிகள் என்கிறார்கள்.தேசிய உணர்வை தமிழ்நாட்டிற்கு போதிக்கும் அருகதை மோடி, அமித்ஷா, நட்டா உள்ளிட்ட யாருக்கும் இல்லை. பேரிடர் தொடர்பாக தமிழகத்திற்கு ஆய்வு செய்ய வந்த மத்திய குழு ரூ. 45 ஆயிரம் கோடி தமிழகம் கேட்பது நியாயம் தான் என ஒப்புக்கொண்டது.ஆனாலும் மத்திய அரசு நிதி ஒதுக்கவில்லை. அவர்கள் தமிழகத்திற்கு நிதி ஒதுக்காததற்கு காரணம் அவர்களால் இங்கு ஒரு இடத்தில் கூட வெற்றி பெற முடியாதது தான். ரூ.6 லட்சத்து 23 கோடி நேரடி வரி கட்டும் தமிழகத்திற்குரூ.58,000 கோடி தான் ஒதுக்குகிறார்கள்.ஆனால் உத்தர பிரதேசத்திற்கு ரூ.2 லட்சத்து 87 ஆயிரம் கோடி ஒதுக்குகிறார்கள். தென் மாநிலங்களுக்கு ஒட்டுமொத்தமாக சேர்த்தே ரூ.2 லட்சம் கோடி தான் ஒதுக்கி உள்ளார்கள். இது குறித்து கேட்டால் நிர்மலா சீத்தாராமன் பதில் கூறுவதே இல்லை.மோடி, அரசு முறை பயணமாக சென்ற போது அதானியையும் அழைத்து சென்றார். அந்த அதானி தான் பங்குகளை பூதாகரப்படுத்தி கணக்குகளில் மோசடி செய்தார் என ஹிட்டன்பர்க் அறிக்கை வெளியிட்டது.இதுகுறித்து கேள்வி கேட்டால் பதில் இல்லை. மணிப்பூரில் நடந்த கலவரம் குறித்து மோடியிடம் கேள்வி கேட்டோம். அதற்கும் பதில் அளிக்கவில்லை. மணிப்பூருக்கு, அதானிக்கு பதில் கூறாத மோடி தமிழகத்திற்கு பணம் கேட்டாலும் கொடுக்க மறுக்கிறார். முன்பெல்லாம் மத்திய அரசு மாநிலங்களுக்கு திட்டங்கள் அறிவிக்கும்போது 80 சதவீதம் நிதி ஒதுக்குவார்கள். ஆனால் தற்போது  50 சதவீதம் தான் ஒதுக்குகிறார்கள். இதனால் மாநிலங்களுக்கு நிதி சுமையை ஏற்படுத்துகிறார்கள். மத்திய அரசு கொண்டு வரும் அனைத்து திட்டங்களும் மேல் ஜாதிக்காரர்களுக்கும், முதலாலிகளுக்குமான திட்டமாக தான் உள்ளது. பிற்படுத்தப்பட்ட தாழ்த்தப்பட்ட மக்களுக்காக எந்த திட்டங்களையும் அவர்கள் கொண்டு வருவதில்லை. மு.க.ஸ்டாலினோ, உதயநிதி ஸ்டாலினோ ரத்த வழி வாரிசல்ல. திராவிட கொள்கை வழி வாரிசுகள். மோடி அரசும், மத்திய அரசு அதிகாரிகளும் தமிழ்நாட்டின் எம்.பிக்களை பார்த்து தான் அச்சப்படுகிறார்கள். அதற்கு காரணம் எங்கள் பின்னால் இருக்கும் பெரியார், அண்ணா, கலைஞர் என்னும் தத்துவம் தான். அந்த தத்துவத்தை வெல்ல திராணி இல்லாத காரணத்தால் தான் அவர்கள் நம்மிடம் மண்டியிடுகிறார்கள். ஆனால், நாம் மண்டியிடாத சுயமரியாதைக்காரர்கள் என்பதை நிரூபித்து ஆதிக்க சக்திகளை, மதவாத சக்திகளை முறியடிப்போம். தமிழ்நாட்டை புறக்கணிக்கின்ற மத்திய அரசுக்கு பாடம் புகட்டுவோம் .இவ்வாறு அவர் பேசினார்.இந்த பொதுக்கூட்டத்தில் சட்டமன்ற உறுப்பினர்கள் பழனியாண்டி, சௌந்தர பாண்டியன், மாவட்ட துணைச் செயலாளர் முத்து செல்வம்,முன்னாள் மாவட்ட துணைச் செயலாளர் குடமுருட்டி சேகர், மாநில பொதுக்குழு உறுப்பினர்கள் கிராப்பட்டி செல்வம், புத்தூர் தர்மராஜ், ஒன்றிய செயலாளர்கள் மாத்தூர் கருப்பையா, அந்தநல்லூர் கதிர்வேல், பகுதி செயலாளர்கள் மோகன்தாஸ், காஜாமலை விஜி , கமால் முஸ்தபா, ராம்குமார், முன்னாள் பகுதி செயலாளர் தில்லை நகர் கண்ணன்,மாநகர துணைச் செயலாளர் கவுன்சிலர் கலைச்செல்வி, திருச்சி மாநகராட்சி மண்டல குழு தலைவர்கள் விஜயலட்சுமி கண்ணன், துர்கா தேவி,மாவட்ட வர்த்தக அணி அமைப்பாளர் பி.ஆர்.சிங்காரம், வர்த்தகர் அணி தொழிலதிபர் ஜான்சன்குமார், மாநகர அயலக அணி அமைப்பாளர் துபேல் அகமது, மாவட்ட பிரதிநிதிகள் வக்கீல் மணிவண்ண பாரதி, சோழன் சம்பத், கவுன்சிலர்கள் ராமதாஸ், மஞ்சுளா பாலசுப்ரமணியன், புஷ்பராஜ், நிர்வாகிகள் டோல்கேட் சுப்பிரமணி, பி.ஆர்.பி பாலசுப்பிரமணியன், வாமடம் சுரேஷ், அரவானூர் தர்மராஜன், அயூப்கான், மார்சிங் பேட்டை செல்வராஜ், இன்ஜினியர் நித்தியானந்தம், தொ.மு.ச குணசேகரன், மின்வாரிய தொழிற்சங்கம் சோலை பாஸ்கர், முன்னாள் கவுன்சிலர் திருநாவுக்கரசு,சர்ச்சில் ரஜினி கிங் உள்ளிட்ட ஏராளமான திமுகவினர் கலந்து கொண்டனர். முடிவில் வட்டச் செயலாளர்கள் புத்தூர் பவுல்ராஜ், பிரேம்குமார் ஆகியோர் நன்றி கூறினர்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்