பராசக்தி திரைப்படத்திற்கு யு/ஏ சான்றிதழ் கொடுக்கப்பட்டுள்ளது. இதனை அடுத்து நாளை( ஜன.10) பராசக்தி திரைப்படம் திட்டமிட்டபடி திரையரங்குகளில் வெளியாகிறது. ‘ஜனநாயகன்’ திரைப்படத்தைப் போலவே தணிக்கைச் சிக்கலில் சிக்கிய சுதா கொங்கராவின் ‘பராசக்தி’ திரைப்படம், பல்வேறு கட்டப் போராட்டங்களுக்கு பிறகு தற்போது ரிலீசுக்குத் தயாராகியுள்ளது. முதலில் இந்தப் படத்தைப் பார்த்த தணிக்கைக் குழுவினர், 25-க்கும் மேற்பட்ட இடங்களில் காட்சிகளை நீக்க அறிவுறுத்தினர். இதற்கு இயக்குநர் மறுப்பு தெரிவித்ததையடுத்து, படம் மறு ஆய்வுக் குழுவிற்கு அனுப்பப்பட்டது. அங்கு படத்தை பார்த்த குழுவினர் 8 முதல் 10 இடங்களில் மட்டும் மாற்றங்களைச் செய்யச் சொல்லி ‘யு/ஏ’ சான்றிதழ் வழங்க முன்வந்தனர். இருப்பினும், வரலாற்றுத் தரவுகள் குறித்த விளக்கங்களை கோரி சான்றிதழ் வழங்காமல் இழுத்தடித்ததால் நாளை படம் வெளியாகுமா என்ற சந்தேகம் நிலவியது. இந்தத் திரைப்படம் 1960-களில் நடைபெற்ற இந்தி எதிர்ப்பு போராட்டத்தை மையமாக கொண்ட வரலாற்று பின்னணி கொண்டது. படத்தில் இடம்பெற்றுள்ள சில காட்சிகள் மற்றும் வரலாற்றுச் சம்பவங்கள் குறித்து தணிக்கை குழுவினர் விளக்கம் கேட்டிருந்தனர். படக்குழுவினர் சமர்ப்பித்த ஆதாரங்கள் போதுமானதாக இல்லை என்று கூறி தணிக்கை வாரியம் பிடிவாதம் காட்டியதால், படத்தின் வெளியீடு கேள்விக்குறியானது. வரலாற்றுத் தரவுகளை உறுதிப்படுத்துவதில் ஏற்பட்ட இந்தத் தாமதமே படத்திற்குச் சான்றிதழ் கிடைப்பதில் பெரும் தடையாக இருந்தது. அனைத்து சிக்கல்களும் ஒருவழியாகச் சுமுகமாக முடிந்த நிலையில், தற்போது ‘பராசக்தி’ திரைப்படத்திற்குத் தணிக்கை வாரியம் ‘U/A 16+’ சான்றிதழை வழங்கியுள்ளது. 2 மணிநேரம் 43 நிமிடங்கள் ஓடக்கூடிய இந்தப் படம், 16 வயதுக்கு மேற்பட்டவர்கள் பார்க்கலாம் என்ற நிபந்தனையுடன் அனுமதி வழங்கப்பட்டுள்ளது. நாளை (ஜன. 10) படம் வெளியாகும் நிலையில், கடைசி நேரத்தில் கிடைத்துள்ள இந்தத் தணிக்கைச் சான்றிதழ் படக்குழுவினருக்கும் ரசிகர்களுக்கும் பெரும் நிம்மதியை அளித்துள்ளது.

Comments are closed.