மணப்பாறையில் ஜனவரி 28-ந் தேதி முதல் பிப்ரவரி 3 வரை சாரண, சாரணியர் இயக்க 75-வது தேசிய அளவிலான பெருந்திரளணி…!
அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி தகவல்
தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்க வைர விழா மற்றும் கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி நடைபெறுவது தொடர்பான ஆலோசனைக் கூட்டம் திருச்சி மாவட்ட கலெக்டர் அலுவலகத்தில் நடைபெற்றது. கலெக்டர் மா.பிரதீப்குமார் முன்னிலை வகித்தார். கூட்டத்துக்கு தலைமை வகித்து, தமிழ்நாடு பாரத சாரண, சாரணியர் இயக்கத் தலைவரும், பள்ளிக் கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி பேசியதாவது:-
சாரணர் இயக்க தேசிய அளவிலான பெருந்திரளணியை தமிழகத்தில் நடத்த அனுமதி கிடைத்துள்ளது. இந்த அனுமதியை முதல்வர் மு.க.ஸ்டாலின் திருச்சி மாவட்டம், மணப்பாறைக்கு வழங்கியுள்ளார். கருணாநிதி நூற்றாண்டு பெருந்திரளணி எனவும் இதற்கு பெயர் சூட்டப்பட்டிருப்பது கூடுதல் பெருமைக்குரியது. தமிழகம் மட்டுமின்றி பல்வேறு மாநிலங்கள், வெளிநாடுகளில் இருந்து சாரணர் இயக்கத்தின் இருபாலரும் என 15 ஆயிரம் பேர் பங்கேற்கவுள்ளனர். எனவே
பாதுகாப்பு, சுகாதாரம், மருத்துவம், உணவு, குடிநீர், தங்கும் வசதி என அனைத்து தேவைகளையும் அந்தந்த துறையினர் கண்ணும், கருத்துமாக இருந்து செய்து தர வேண்டும். ஜனவரி 28-ந்தேதி தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை 7 நாட்களும் உலக நாடுகள் நம்மை உற்றுநோக்கும். பிரதமர், குடியரசுத் தலைவர், ஆளுநர் உள்ளிட்டோரும் கூர்ந்து கவனிக்கும் பேரணியாகும். இதனை வெற்றிகரமாக நடத்தி முடிக்க வேண்டும். இந்தியாவிலேயே பிற மாநிலங்களைவிட தமிழகத்தில்தான் இந்த இயக்கம் முன்னிலையில் உள்ளது. இயற்கை இடர்பாடுகளின் போது உடனடியாக மீட்புப் பணிகளை மேற்கொள்ளுதல், தற்காலிக பாலம் அமைத்தல், நிவாரண முகாம்களுக்கு கூடாரம் அமைத்தல் என ராணுவத்துக்கு இணையாக பணியாற்றுவர். அந்தக் காட்சியைவருகிற ஜனவரி
28-ந் தேதி தொடங்கி பிப்ரவரி 3-ந் தேதி வரை அனைவரும் நேரில் கண்டறியலாம். பெருந்திரளணியை வெற்றிகரமாக நடத்துவதற்கு பள்ளிக் கல்வித்துறையின் 8 இயக்குநர்கள் தலைமையில் 33 குழுக்கள் ஏற்படுத்தப்பட்டுள்ளன. இக்குழுவினர் பிரிந்து அனைத்து பணிகளையும் மேற்கொள்வர். இவ்வாறு அவர் பேசினார்.
கூட்டத்தில், பள்ளிக் கல்வித் துறை முதன்மைச் செயலாளர் எஸ்.மதுமதி, சாரணர் இயக்க வைர விழாவின் தலைமை பொறுப்பாளர் (மாநில முதன்மை பேராணையர்) அறிவொளி, மாநகரக் காவல்துறை ஆணையர் ந.காமினி, மாநகராட்சி ஆணையர் வே.சரவணன், மாவட்டக் காவல் கண்காணிப்பாளர் வருண்குமார், தொடக்கக் கல்வி இயக்குநர்கள் கண்ணப்பன், நரேஷ், பழனிச்சாமி, நாகராஜமுருகன், இராமேஸ்வரமுருகன், குப்புசாமி, சேதுராமவர்மா, உஷாராணி, சாரணர் இயக்க தேசிய செயல் இயக்குநர் அமீர்ஷத்ரி, மாநிலப் பொருளாளர் விஜயன் உள்ளிட்ட பலர் கலந்து கொண்டனர்.
Comments are closed.