கோயம்புத்தூரில் இருந்து திருச்சி நோக்கி கனரக லாரி ஒன்று இன்று(09-10-2024) காலை 8 மணி அளவில் வந்து கொண்டிருந்தது. லாரியை பெரம்பலூர் மாவட்டம்,
குன்னம் வட்டத்தை சேர்ந்த சுகுமார் என்பவர் ஓட்டி வந்தார். திருச்சி குடமுருட்டி பாலம் அருகே லாரி வந்தபோது எதிர்பாராத விதமாக சாலையின் இடது புறம் இருந்த குடமுருட்டி சோதனை சாவடி மீது பயங்கரமாக மோதியது. இதில், சோதனை சாவடியின் ஒரு பகுதி முற்றிலுமாக சேதம் அடைந்தது. இந்த விபத்தால் போக்குவரத்து பாதிக்கப்பட்டு சாலையின் இருபுறமும் வாகனங்கள் அணிவகுத்து நின்றன. விபத்தின் போது அங்கு பணியில் இருந்த நாகராஜ் என்ற சிறப்பு உதவி ஆய்வாளர் இடிபாடுகளில் சிக்கிக் கொண்டார். ஆயினும் அவர் எந்த காயமும் இன்றி உயிர் தப்பினார்.
இதுகுறித்து தகவல் அறிந்த கோட்டை போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து இடிபாடுகளை அகற்றியதோடு போக்குவரத்தையும் சீரமைத்தனர். விபத்து ஏற்படுத்திய லாரி டிரைவர் சுகுமாரிடம் விசாரணை மேற்கொண்டதில் அவர் கோயம்புத்தூரில் சிமெண்ட் லோடை இறக்கிவிட்டு திரும்பும் வழியில்,சற்று கண் அயர்ந்து விட்டதால் விபத்து ஏற்பட்டதாக கூறினார்.
மேலும் தொடர்ச்சியாக விடுமுறை இன்றி பணிபுரிந்ததால் மன உளைச்சலில் இருந்ததாகவும் தெரியவந்தது. இந்த விபத்து தொடர்பாக மேலும் விசாரணை நடத்தப்பட்டு வருகிறது
Comments are closed.