குழந்தைகளின் திறமைகளை ஆசிரியர்களும், பெற்றோர்களும் கண்டறிய வேண்டும்: * கல்வி அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி…!
சென்னையில் நடைபெற்ற நிகழ்ச்சி ஒன்றில், சிறப்பு அழைப்பாளராக தமிழக பள்ளிக் கல்வித்துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி கலந்துகொண்டு சிறப்புரையாற்றினார். அப்போது அவர் பேசுகையில், ”பெற்றோர்கள் தாம் படும் கஷ்டங்களை பிள்ளைகளிடம் சொல்லவே மாட்டார்கள். பிள்ளைகள் நல்ல வழியில் செல்ல வேண்டும் என ஆசைப்படுவார்கள். எனவே பெற்றோர்களுக்கு ஏற்றார்போல் நல்ல பிள்ளைகளாக மாணவர்களாகிய நீங்கள் நடந்து கொள்ளுங்கள். பெற்றோர்களுக்கு இந்த நேரத்தில் நான் வைக்கக்கூடிய கோரிக்கை என்னவென்றால், எக்காரணத்தைக் கொண்டும் பிள்ளைகளை மற்ற பிள்ளைகளோடு ஒப்பிடாதீர்கள். நம்ம குழந்தைகளுக்கென்று இருக்கும் திறமையைக் கண்டறிய வேண்டியது பெற்றோர்கள் கடமை. பெற்றோர்களுக்கு இதைவிட வேற என்ன வேலை இருக்கிறது. குழந்தையை ஸ்கூலில் விட்டுவிட்டேன். 3 மாதத்துக்கு ஒரு தடவை தேர்வு வருது. அப்ப மட்டும் தான் குழந்தையை அக்சஸ் பண்ணுகிறேன் என்பது பெற்றவர்கள் வேலை கிடையாது. அதை யார் வேண்டுமானாலும் செய்துகொண்டு போகலாம். பெற்றவர்கள் என்பவர்கள் குழந்தை பள்ளிக்கு சென்றுவிட்டு வரும் பொழுது அவர்களுடைய நடவடிக்கைகளை அப்சர்வ் பண்ண வேண்டும். எந்த விஷயங்களில் அவர்கள் ஆர்வமாக இருக்கிறார்கள் என்று பாருங்கள். எடுத்த உடனே குறை கண்டுபிடிக்காதீர்கள். அந்த குழந்தையால் அழகாக ஒரு ஓவியம் வரைய முடியுமா?, அந்த குழந்தையால் அழகாக கவிதை எழுத முடியுமா?, அந்த குழந்தைக்கு நன்றாக பேசும் திறமை இருக்கிறதா என்று கண்டறியுங்கள். இதை பெற்றோர்களுக்கும் ஆசிரியர்களுக்கான கூட்டுப் பொறுப்பாக நான் பார்க்கிறேன். அதனால்தான் “கலைத் திருவிழா” என்ற ஒன்றைப் பள்ளிகளில் கொண்டு வருகிறோம். சில பிள்ளைகளுக்கு பாடத்தை கவனித்து நல்ல மதிப்பெண் வாங்க முடியும். ஆனால் எல்லாரும் நூற்றுக்கு நூறு வாங்கி விட முடியாது. சில குழந்தைகள் 60 மதிப்பெண் தான் வாங்குவார்கள். சில குழந்தைகள் ஜஸ்ட் பாஸ் கூட ஆவார்கள். ஆனால் ஜஸ்ட் பாஸ் வாங்குகின்ற பிள்ளைக்கு இருக்கும் திறமை 90 மதிப்பெண் வாங்கும் பிள்ளைகளுக்கு இருக்காது. அந்த திறமையை கண்டறிய வேண்டியது யாருடைய பொறுப்பு, நம்முடைய பொறுப்பு தான்” என்று அவர் பேசினார்.
Comments are closed.