நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளுக்கு குறி: ‘ஆபரேஷன் அறம்’ பயங்கரவாத தடுப்பு படையில் 181 போலீஸ் அதிகாரிகள்…! *டிஜிபி சங்கர் ஜிவால்
தமிழ்நாடு டிஜிபி சங்கர் ஜிவால் செய்தியாளர்கள் சந்திப்பில் கூறியதாவது:-
நீண்ட காலமாக தலைமறைவாக உள்ள குற்றவாளிகளை பிடிக்க “ஆபரேஷன் அறம்” என்ற பெயரில் பயங்கரவாத தடுப்பு படை உருவாக்கப்பட்டுள்ளது. இதன்மூலம் கோவை குண்டுவெடிப்பு வழக்கில் தேடப்பட்ட குற்றவாளி டெய்லர் ராஜா 30 ஆண்டுகளுக்குப் பின் கைதாகி உள்ளார். கர்நாடகாவில் பதுங்கியிருந்த
அவரை தமிழ்நாடு பயங்கரவாத தடுப்புப்படை கைது செய்துள்ளது. அபுபக்கர் சித்திக் என்பவர் மீது தமிழகத்தில் 5 வழக்குகளும், கேரளாவில் இரு வழக்குகளும், கர்நாடகா, ஆந்திராவில் தலா ஒரு வழக்குகளும் உள்ளன. 2-வது குற்றவாளி முகமது அலி, 1999ம் ஆண்டு குண்டு வெடிப்பு சம்பவம் உள்பட 7 வழக்குகள் உள்ளன.
இவர்கள் ஆந்திராவின் கடப்பாவில் கைது செய்யப்பட்டு ள்ளனர். குற்றவாளிகள் கைது செய்யப்பட்ட 24 மணிநேரத்திற்குள் நீதிமன்ற காவலுக்கு உட்படுத்த வேண்டும். அதன்பிறகு, போலீசார் காவலில் எடுத்து விசாரிக்க வேண்டும். டெய்லர் ராஜா மட்டும் அல் உம்மா பயங்கரவாத அமைப்புடன் தொடர்பு வைத்துள்ளார்.
மற்ற இருவருக்கும் எந்த அமைப்புடனும் தொடர்பில்லை. இந்த வழக்கில் தொடர்புடைய பெரும்பாலான குற்றவாளிகள் கைது செய்யப்பட்டு விட்டனர். பல ஆண்டுகளாக தலைமறைவாக இருந்த டெய்லர் ராஜா 1998ம் ஆண்டு கோவை தொடர் குண்டுவெடிப்பு வழக்குடன் தொடர்புடையவர். பயங்கரவாத எதிர்ப்புப் படையில் 181 அதிகாரிகள் உள்ளனர். கைது செய்யப்பட்டவர்களை போலீஸ் காவலில் எடுத்து விசாரணை மேற்கொள்ள உள்ளோம். பயங்கரவாத தடுப்புப்படை வெற்றிகரமான நடவடிக்கைகளை மேற்கொண்டுள்ளது. அபுபக்கர் சித்திக் வெடிகுண்டுகளை தயாரித்து வந்துள்ளார். அவர் கொடுத்த வாக்குமூலத்தின் அடிப்படையில், தங்கியிருந்த இடத்தில் நடத்தப்பட்ட சோதனையில் வெடிகுண்டுகளை தயாரிக்கும் பொருட்கள் பறிமுதல் செய்யப்பட்டன. ஒரு வழக்கில் 150 அல்லது 160 குற்றவாளிகள் இருக்கும்போது, 2 அல்லது 3 பேர் ரொம்ப நாள் தலைமறைவாக இருந்தாலும், அது வெற்றிகரமான ஆபரேஷன் தான். அதேபோல, ஒரு வழக்கில் தொடர்புடைய 150 பேரும் தலைமறைவாக இருந்தால்தான் அந்த வழக்கில் தோல்வியடைந்து விட்டதாகஅர்த்தம். கடந்த 8 ஆண்டுகளாக தமிழக போலீசார் சிறப்பாக செயல்பட்டுள்ளனர் . வரும் காலங்களில் தமிழகத்தில் பயங்கரவாத செயல்பாடுகள் மற்றும் கடுமையான குற்றங்கள் நடக்காது என்ற நிலை உறுதி செய்யப்பட்டுள்ளது. குற்றங்கள் நடைபெறாமல் தடுக்க அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகிறது. இவ்வாறு அவர் கூறினார்.

Comments are closed.