தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கம் சார்பில் பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டம் இன்று திருச்சி கண்காணிப்பு பொறியாளர் அலுவலகத்தில் நடைபெற்றது. இந்த ஆா்ப்பாட்டத்தில் சாலைப்பணியாளர்களின் 41 மாத பணி நீக்க காலத்தை பணிக்காலமாக முறைப்படுத்தி ஆணை வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு தொழில்நுட்ப கல்வித்திறன் பெறாத ஊழியருக்கான ஊதிய மாற்றம், சாலைப்பணியாளர்களின் பணிக்காலத்தில் உயிர் நீத்தவர்களின் வாரிசுகளுக்கு கருணை அடிப்படை பணி நியமனம் வழங்க கேட்டு விண்ணப்பித்தோருக்கு விரைந்து பணி நியமனம் வழங்க வேண்டும். சாலைப்பணியாளர்களுக்கு ஊதியத்தில் 10 சதவீதம் ஆபத்து படி, நிரந்தர பயணப்படி, சீருடை சலவைப்படி வழங்க வேண்டும் என்ற கோரிக்கைகளை வலியுறுத்தி, பட்டை நாமம் போட்டு தொடர் முழக்கப் போராட்டம் நடத்தினர். இதில் தமிழ்நாடு நெடுஞ்சாலைத்துறை சாலைப்பணியாளர் சங்கத்தின் மாநில செயலாளர் கு.பழனிச்சாமி, திருச்சி மாவட்டத் தலைவர்கள் மு.ஜீவானந்தம், புதுக்கோட்டை மாவட்டத் தலைவர் ப.முத்தக்கருப்பண், தஞ்சாவூர் மாவட்டத் தலைவர் பா.சரவணன், நாகப்பட்டிணம் மாவட்டத் தலைவர் சி.கணேசன், திருவெறும்பூர் மாவட்டத் தலைவர் பி.மகாலிங்கம், மயிலாடுதுறை மாவட்டத் தலைவர் பூ.ஜார்ஜ் மற்றும் இதர மாவட்ட செயலாளர்கள், மாவட்ட பொருளாளர்கள் மற்றும் சங்கத்தினர் கலந்துகொண்டனர்.