அரசு பேருந்தில் தமிழக வெற்றிக்கழக சிலைடு: இந்த தரமான சம்பவத்தை செய்த “விரிச்சுவல் வாரியர்” யார்?- அதிர்ச்சியில் போக்குவரத்து கழக அதிகாரிகள்..!
கம்பத்தில் இருந்து திருச்சி வந்த அரசு பேருந்தில், மின்னணு டிஸ்பிளேவில், ஊர் பெயர்களுக்கு பதிலாக, தமிழக வெற்றிக்கழகம் சிலைடு ஓடியது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது. திருச்சி கண்டோன்மென்ட் புறநகர் டெப்போவைச் சேர்ந்த அரசு பேருந்து, கடந்த, 4ம் தேதி காலை, கம்பத்தில் இருந்து திருச்சிக்கு புறப்பட்டது. அந்த பேருந்து, வையம்பட்டி–மணப்பாறை இடையே செல்லும் போது, பஸ்சின் முன்புறமும், பின்புறம் உள்ள ஊர்களின் பெயர்கள் சிலைடு ஓடும் மின்னணு டிஸ்பிளேவில், ஊர் பெயர்களுக்கு பதிலாக தமிழக வெற்றிக்கழகம் என்று ஓடியுள்ளது. இதைப்பார்த்த ஒருவர், வீடியோ எடுத்து, அதை அப்படியே சமூக வலைதளங்களில் பரவ விட்டார். இதையடுத்து அன்றைக்கு பணியில் இருந்த பேருந்து டிரைவர் பிரபு, கண்டக்டர் பழனிசாமி ஆகியோரிடம் விசாரணை நடத்தப்பட்டது. அப்போது அவர்கள், வையம்பட்டி பகுதியில் ஏறிய யாரோ தான், பென்டிரைவ் மூலம் மின்னணு டிஸ்பிளேவை மாற்றி, தமிழக வெற்றிக்கழகம் என்று ஓடவிட்டது தெரிய வந்தது. இதுகுறித்து போலீசில் புகார் அளிக்க, போக்குவரத்து கழக அதிகாரிகள் முடிவு செய்துள்ளனர்.
இதுதொடர்பாக தமிழக அரசுபோக்குவரத்து கழகம் விளக்கம் அளித்துள்ளது. அதில், சமூக வலைதளங்களில் பகிரப்பட்டு வரும் வீடியோவில் உள்ள பேருந்தானது, தமிழ்நாடு அரசுப் போக்குவரத்துக் கழகம் (கும்பகோணம்) லிமிடெட், திருச்சி மண்டலத்தைச் சேர்ந்த புதிய பேருந்து ஆகும். இப்பேருந்தில் உள்ள மின்னணு வழித்தடப் பலகையில் சில வாசகங்கள் இடம்பெற்றது குறித்து உடனடி விசாரணை மேற்கொள்ளப்பட்டது. விசாரணையில், யாரோ அடையாளம் தெரியாத நபர்கள் அந்தப் பேருந்தின் வழித்தடப் பலகையினை இயக்கும் மென்பொருள் பலகையை ஹேக் செய்து, இத்தகைய தவறான வாசகங்களை பதிவிட்டது கண்டறியப்பட்டது. இச்சம்பவம் கவனத்திற்கு வந்தவுடன், உடனடியாக அந்த மின்னணு பலகையின் மதர்போர்டு மாற்றப்பட்டு, சரியான வழித்தட விவரங்கள் பதிவேற்றப்பட்டன.இதுபோன்ற செயல்கள் இனி நிகழாமல் இருக்கவும், சம்பந்தப்பட்ட நபர் மீது உரிய நடவடிக்கை எடுக்கவும். மின்னணு பலகை சேவை வழங்கும் நிறுவனத்திற்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது” என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.