தமிழகத்தின் மிக நீளமான சாலை மேம்பாலமாக மதுரை-நத்தம் மேம்பாலம் சுமார் 7.3 கிலோ மீட்டர் தூரத்துக்கு உள்ளது. அதனை மிஞ்சும் வகையில் கோவையில் அவினாசி சாலையில் கோல்டு வின்ஸ் முதல் உப்பிலிபாளையம் வரை 10.1 கிலோமீட்டர் நீளத்துக்கு கட்டப்பட்டு உள்ளது. இது இந்தியாவின் மூன்றாவது பெரிய தரைவழிப்பாலம் என்ற பெருமையை பெற்றுள்ளது. கோவை நகரில் இருந்து விமான நிலையம் செல்வதற்கு சுமார் 10 கிலோ மீட்டர் தூரத்தை கடக்க குறைந்தது 45 நிமிடங்கள் ஆகிறது. இந்த பாலம் திறக்கப்பட்டதும் 10 நிமிடங்களில் இந்த தூரத்தை கடக்கலாம். குறிப்பாக விமான நிலையம், கொடிசியா, ஹோப் காலேஜ், நவ இந்தியா, லட்சுமி மில்ஸ், அண்ணாசிலை மற்றும் உப்பிலிபாளையம் ஆகிய சந்திப்புகளில் கடும் நெருக்கடி ஏற்படுகிறது. எனவே கடந்த 2020-ம் ஆண்டு இந்த பகுதியில் மேம்பாலம் அமைக்கும் பணிகள் தொடங்கியது. அதில் ஒரு ரெயில்வே கிராசிங்கும் வருகிறது. மேம்பாலத்திற்காக மொத்தம் சுமார் 4.90 ஏக்கர் நிலம் ரூ.228 கோடி மதிப்பில் கையகப்படுத்தப்பட்டது. இந்த மேம்பால கட்டுமானம் முன்னேற்பாடு பணி, அதாவது ப்ரீகாஸ்ட் முறையில் பொதுமக்களுக்கு இடையூறு இல்லாமல் மேற்கொள்ளப்பட்டு வந்தது. இந்நிலையில் இந்த மேம்பால பணிகள் முடிந்ததால், முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் இன்று(09-10-2025) திறந்து வைத்தார். இந்த மேம்பாலம் மூலம் நகரில் இருந்து விமான நிலையம் மட்டுமின்றி சேலம், ஈரோடு, திருப்பூர், அவினாசி ஆகிய பகுதிகளுக்கும் இனி விரைவாக செல்ல முடியும். இந்த மேம்பாலத்தில் கோவை விமான நிலையம், ஹோப் காலேஜ், நவஇந்தியா மற்றும் அண்ணா சிலை என 4 இடங்களில் ஏறுதளம் மற்றும் இறங்கு தளம் அமைக்கப்பட்டு உள்ளது. தமிழ்நாட்டில் முதல் முறையாக பாலத்தின் ஒவ்வொரு பகுதியிலும் மழை நீர் சேகரிப்பு அமைப்பு ஏற்படுத்தப்பட்டு உள்ளது. இந்த மேம்பாலத்தில் பாதுகாப்பு சுவர்கள்,ரோலர் தடுப்பு கருவிகள், உலக தரமான பாதுகாப்பு வசதிகள் செய்யப்பட்டு உள்ளன. தற்போது பாலத்தில் அண்ணா சிலை ஏறுதளம் மற்றும் அதன் அளவுக்கு நடைமேடையுடன் கூடிடிய வடிகால் அமைப்பு தவிர மற்ற அனைத்து பணிகளும் முடிந்து போக்குவரத்திற்கு தயாராக உள்ளன. இந்த மேம்பாலம் 4 வழித்தட உயர்மட்ட மேம்பாலம் ஆகவும், 6 வழித்தடத்துடன் கூடிய விரிவுப்படுத்தப்பட்ட தரைவழிச்சாலை என மொத்தம் 10 வழித் தடங்களுடன், அமைக்கப்பட்டு உள்ளது. திறப்பு விழாவையொட்டி மேம்பாலம் மின் விளக்குகளால் அலங்கரிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.