Rock Fort Times
Online News

தமிழ்நாடு காவல்துறையில் அடுத்தடுத்து” பகீர்”:- கம்ப்ளைன்ட் கொடுத்த பெண்ணை ஆசைக்கு இணங்குமாறு அழைத்த சப்- இன்ஸ்பெக்டர்…! (வீடியோ இணைப்பு)

திருச்சி மாவட்டம், துறையூர் பகுதியை சேர்ந்த ஒரு தம்பதி, காதலித்து திருமணம் செய்து கொண்டவர்கள். இந்த தம்பதிக்கு இரண்டு மகள்களும், ஒரு மகனும் உள்ளனர். கிணற்றிலிருந்து தங்களது வயல்களுக்கு தண்ணீர் பாய்ச்சுவது தொடர்பாக இந்த தம்பதிக்கும், அவர்களது உறவினரான ஒருவருக்கும் இடையே பிரச்சனை இருந்து வருவதாக கூறப்படுகிறது. இந்நிலையில் கடந்த 29 -05 – 2025-ம் தேதி கிணற்றில் இருந்து தனது வயலுக்கு அந்தப் பெண் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டிருந்தார். அப்போது அங்கு வந்த அவரது உறவுக்காரர் அந்தப் பெண்ணிடம் தகராறு செய்ததுடன் அவர் அணிந்திருந்த நைட்டியை கிழித்ததாக கூறப்படுகிறது. இதுகுறித்து துறையூர் காவல் நிலையத்தில் அந்தப் பெண் புகார் அளித்தார். உறவுக்காரர் தரப்பிலும் புகார் அளிக்கப்பட்டது. புகார் சம்பந்தமாக
விசாரணைக்கு வருமாறு காவல் நிலைய சிறப்பு உதவி ஆய்வாளர், அந்தப் பெண்ணை காவல் நிலையத்துக்கு அழைத்துள்ளார். அங்கு சென்ற அந்தப் பெண்ணிடம் விசாரணை நடத்திய எஸ்.எஸ்.ஐ., நீ உனது கணவரை காதல் திருமணம் செய்து 3 குழந்தைகள் பெற்றுள்ளாய், நீ உயர்ந்த சாதி தானே தாழ்ந்த சாதியை சேர்ந்தவனை திருமணம் செய்து பிள்ளையை பெற்றிருக்க என்று சம்பந்தமே இல்லாமல் பேசியதுடன் எதுவாக இருந்தாலும் நான் பார்த்துக் கொள்கிறேன் நீ எனது ஆசைக்கு இணங்க வேண்டும் என்று கூறியதாக தெரிகிறது. இல்லை என்றால் உன் புகாரை விசாரிக்க அலைக்கழிப்பேன் எனக் கூறியுள்ளார். இதுகுறித்து, தனது கணவரிடம் அந்தப் பெண் அழுது கொண்டே தெரிவித்துள்ளார். இதுகுறித்து விசாரணை நடத்தி எஸ்.எஸ்.ஐ மீது நடவடிக்கை எடுக்க வேண்டும் என தம்பதி இருவரும் திருச்சி மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு செல்வ நாக ரத்தினத்திடம் புகார் மனு அளித்தனர். புகாரினை பெற்றுக்கொண்ட எஸ்.பி., இதுகுறித்து விசாரித்து உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என்று தெரிவித்தார். ஆனால் எஸ்எஸ்ஐ மீது இன்னும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை. இதனால் மன உளைச்சலுக்கு ஆளான அந்த பெண் தனக்கு நேர்ந்த சம்பவம் குறித்து வீடியோ ஒன்றை சமூக வலைதளங்களில் பதிவிட்டார். அந்த வீடியோ தற்போது வைரலாகி வருகிறது. ஏற்கனவே, நகை திருட்டு சம்பந்தமாக அஜித்குமார் என்ற வாலிபரை போலீசார் காட்டுமிராண்டித்தனமாக தாக்கியதில் அவர் உயிரிழந்தார். இந்த சம்பவம் தமிழ்நாடு முழுவதும் பெரும் அதிர்வலைகளை ஏற்படுத்தியது. தற்போது விசாரணைக்கு வந்த ஒரு பெண்ணை எஸ்.எஸ்.ஐ. உல்லாசத்திற்கு அழைத்த சம்பவம் காவல்துறை வட்டாரத்தில் மீண்டும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்