Rock Fort Times
Online News

“இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உள்ளது”- பல்லடத்தில் பிரதமர் மோடி பேச்சு…!

தமிழ்நாடு பாஜக தலைவர் அண்ணாமலை, “என் மண், என் மக்கள்” என்ற பெயரில் பாதயாத்திரை நடத்தினார். அதன் நிறைவு விழா திருப்பூர் மாவட்டம்
பல்லடத்தில் இன்று(27-02-2024) நடைபெற்றது. இதற்காக பல்லடம் அருகே தாமரை வடிவில் பிரம்மாண்ட பொதுக் கூட்ட மேடை அமைக்கப்பட்டிருந்தது. இதில் கலந்து கொள்வதற்காக பிரதமர் நரேந்திர மோடி திருவனந்தபுரத்திலிருந்து தனி விமானம் மூலம் சூலூர் வந்தடைந்தார். அங்கிருந்து சாலை மார்க்கமாக பொதுக்கூட்ட மேடையை அடைந்தார். பின்னர், பொதுக்கூட்டத்தில் பிரதமர் மோடி பேசுகையில், தமிழ்நாட்டுக்கு வந்திருப்பது எனக்கு மிகவும் மகிழ்ச்சி அளிக்கிறது.

நாட்டின் பொருளாதாரத்தில் திருப்பூர் முக்கிய பங்கு வகிக்கிறது. காரணம் ஜவுளி உற்பத்தி. தமிழ்நாடு, இந்தியாவின் முதன்மை மாநிலமாக மாறும். இந்தியாவின் தலையெழுத்தையே மாற்றும் வல்லமை தமிழ்நாட்டுக்கு உள்ளது. தமிழ் மண்ணும், தமிழ் பண்பாடும் எனது மனதுக்கு மிகவும் நெருக்கமானது. தமிழ்நாட்டுக்கும் எனக்கும் அரசு முறை உறவு அல்ல, எனது இதயத்துக்கு நெருக்கமான உறவு. உலகிலேயே வேகமாக வளரும் பொருளாதார நாடாக இந்தியா விளங்குகிறது. நாட்டின் அரசியல் வளர்ச்சியில் தமிழகம் புதிய மையமாக மாறியுள்ளது. தமிழகம் தேசியத்தின் பக்கம் நிற்பதை இங்கு கூடியுள்ள மக்கள் மூலம் தெரிகிறது. டெல்லியில் ஏ.சி.அறையில் அமர்ந்து கொண்டு எதிர்க்கட்சிகள் விமர்சனம் செய்து வருகின்றன. தமிழகத்தில் அதிகமாக பாஜகவை பற்றிதான் பேசுகின்றனர். என் மண் என் மக்கள் யாத்திரை மக்களிடையே பெரும் வரவேற்பை பெற்றுள்ளது. தமிழகத்தின் வளர்ச்சிக்காக பாஜக அரசு முன்னுரிமை கொடுத்து வருகிறது. ஏழைகள் உள்ளிட்ட அனைத்து மக்களுக்காவும் மத்திய அரசு செயலாற்றி வருகிறது. தமிழகத்தில் 40 லட்சம் பெண்களுக்கு இலவச சிலிண்டர்கள் கொடுத்துள்ளோம். இன்று தமிழகம் வந்துள்ள நான் எம்.ஜி.ஆரை நினைத்து பார்க்கிறேன். ஏழைகளுக்கு கல்வி, மருத்துவ வசதி போன்றவற்றை செய்தவர் எம்.ஜி.ஆர். அதனால் அவர் இன்றும் நினைத்து பார்க்கப்படுகிறார். எம்.ஜி.ஆரை போலவே ஜெயலலிதாவும் மக்கள் மத்தியில் நிலை பெற்றிருந்தவர். ஜெயலலிதா தமிழ்நாட்டு மக்களோடு எந்த வகை தொடர்பு கொண்டிருந்தார் என்பது எனக்கு தெரியும். 2 பாதுகாப்பு தளவாட உற்பத்தி மையங்களில் ஒன்று தமிழகத்திற்கு வருகிறது. நாடு வளர்ச்சி அடையும் போது தமிழகமும் அதே வேகத்தில் வளர்ச்சி அடையும். இவ்வாறு அவர் பேசினார். கூட்டத்தில் , கட்சி நிர்வாகிகள், தொண்டர்கள் திரளாக கலந்து கொண்டனர்.

Comments are closed, but trackbacks and pingbacks are open.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்