Rock Fort Times
Online News

விடைபெற்றார், தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி: காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா…!

தமிழக ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்கு வங்க மாநில ஆளுநராக மாற்றப்பட்டதைத் தொடர்ந்து அவருக்கு வழியனுப்பு விழா தமிழக அரசு சார்பில் இன்று (11.03.2026) நடைபெற்றது. அதாவது தமிழகத்தின் ஆளுநராக 4 ஆண்டுகள் 5 மாதங்கள் செயல்பட்ட ஆளுநர் ஆர்.என். ரவிக்கு காவல்துறை சார்பில் வழியனுப்பு விழா நடைபெற்றது. இதனையடுத்து இன்று டெல்லி செல்லும் ஆளுநர் ஆர்.என்.ரவி, மேற்குவங்க ஆளுநராக நாளை (மார்ச் 12) பதவியேற்கிறார். முன்னதாக கடந்த 7ம் தேதி அன்று தமிழக முதலமைச்சர் மு.க. ஸ்டாலின், ஆளுநர் மாளிகைக்குச் சென்று ஆர்.என். ரவியை நேரில் சந்தித்து வாழ்த்து தெரிவித்திருந்தார். இந்தச் சந்திப்பின் போது முதலமைச்சர் அவருக்கு நினைவுப் பரிசு வழங்கி கௌரவித்தார். மற்றொருபுறம் ஆளுநர் ஆர்.என். ரவி, தான் விடைபெறுவது குறித்து தமிழக மக்களுக்கு உருக்கமான கடிதம் ஒன்றை எழுதியிருந்தார். அதில், “தமிழக ஆளுநராக 54 மாதங்கள் பணியாற்றிய போது தமிழகத்தில் கழித்த காலத்தை எனது வாழ்வின் பொற்காலம்” எனத் தெரிவித்திருந்தது குறிப்பிடத்தக்கது. இவரது பதவிக்காலத்தில் தமிழக அரசுக்கும், ஆளுநர் மாளிகைக்கும் இடையிலான பல்வேறு அரசியல் விவாதங்களுக்கு உட்பட்டிருந்தாலும், விடைபெறும் போது தமிழகத்தின் பண்பாடு மற்றும் தமிழ் மொழி மீதான தனது பற்றை அவர் வெளிப்படுத்தியுள்ளது கவனிக்கத்தக்கது. ஆளுநர் ஆர்.என். ரவி விடைபெற்றதைத் தொடர்ந்து, கேரள ஆளுநர் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகர் தமிழக ஆளுநர் பொறுப்பைக் கூடுதலாகக் கவனிக்க உள்ளார். அவர், நாளை பொறுப்பேற்க உள்ளார். சென்னை கிண்டியில் உள்ள மக்கள் மாளிகையில் ராஜேந்திர விஸ்வநாத் அர்லேகருக்கு சென்னை உயர்நீதிமன்ற தலைமை நீதிபதி சுஷ்ருத் அரவிந்த் தர்மாதிகாரி முன்னிலையில் பதவியேற்பு விழா நடைபெற உள்ளதாக கூறப்படுகிறது.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்