Rock Fort Times
Online News

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது- முதல்வர் மு.க.ஸ்டாலின்…!

தமிழகத்தில் கோடை வெப்பம் தணிந்து, பல்வேறு மாவட்டங்களில் மழை பெய்து வருகிறது. தற்போது, தமிழகம் மற்றும் அதை ஒட்டிய வடக்கு கேரள பகுதிகளின் மேல் ஒரு வளிமண்டல கீழடுக்கு சுழற்சி நிலவுகிறது. இதன் காரணமாக நீலகிரி, கோவை, திருப்பூர், தேனி, திண்டுக்கல், ஈரோடு, கிருஷ்ணகிரி மற்றும் தர்மபுரி மாவட்டங்களில் இன்று (மே 19) கனமழைக்கு வாய்ப்பு இருப்பதாக வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது. தென்மேற்கு பருவமழை வழக்கமாக ஜூன் மாதம் தொடங்கும். கேரளாவில் தென்மேற்கு பருவமழை மே 20-ந் தேதியே தொடங்கும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. தமிழகத்தில் தென்மேற்கு பருவமழை முன்கூட்டியே தொடங்கும் என்று வானிலை ஆய்வாளர்கள் கூறுகின்றனர். மேலும், தென்மேற்கு பருவமழை இந்த ஆண்டு இயல்பை விட அதிகமாக பெய்யும் என்றும் தெரிவித்துள்ளனர். இந்நிலையில், தென்மேற்கு பருவமழை முன்னேற்பாடுகள் பணிகள் குறித்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் சென்னை தலைமைச் செயலகத்தில் மாவட்ட கலெக்டர்கள் மற்றும் அதிகாரிகளுடன் ஆலோசனை நடத்தினார். இந்த ஆலோசனையில் அதிகாரிகளுக்கு சில முக்கிய அறிவுரைகளை வழங்கினார். தொடர்ந்து முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் பேசியதாவது:-

தென்மேற்கு பருவமழையை எதிர்கொள்ள தமிழக அரசு தயார் நிலையில் உள்ளது. அனைத்து மாவட்ட கலெக்டர்களும் உஷார் நிலையில் இருக்க வேண்டும். மேற்கு தொடர்ச்சி மலைப்பகுதியில் நிலச்சரிவை தடுக்க நடவடிக்கை எடுக்க வேண்டும். மழைக்காலங்களில் கடலோர மாவட்டங்கள் தயார் நிலையில் இருக்க வேண்டும். இந்த ஆண்டு தென்மேற்கு பருவமழை இயல்பாகவே இருக்கும். மாநில கட்டுப்பாட்டு மையம் 24 மணி நேரம் பயன்பாட்டில் இருப்பதை உறுதி செய்ய வேண்டும். பேரிடர் முகாம்கள் தயார் நிலையில் இருப்பதுடன், உணவு உள்ளிட்டவையும் போதுமான அளவு உள்ளதை உறுதி செய்ய வேண்டும். இயற்கை சீற்றங்களில் இருந்து மக்களை காக்க வேண்டிய பெரும் கடமை அரசுக்கு உள்ளது என்றார்.

Comments are closed.

Rockfort Times செய்திகளை உடனுக்குடன் அறிந்து கொள்ள வேண்டுமா? இல்லை ஆம்