தஞ்சை தமிழ் பல்கலைக் கழகத்தில் கடந்த 2017-18-ல் பேராசிரியர், உதவிப் பேராசிரியர் பணியிடங்களில் 40 பேரை, அப்போதைய துணைவேந்தர் பாஸ்கரன் பணி நியமனம் செய்தார். அவர்கள் உரிய கல்வித் தகுதி இல்லாமல் முறைகேடாக நியமிக்கப்பட்டுள்ளதாக சர்ச்சை எழுந்தது. இது தொடர்பாக நீதிமன்றத்தில் வழக்கு விசாரணையும் நடந்து வருகிறது. 2021-ல் துணைவேந்தராக நியமிக்கப்பட்ட திருவள்ளுவன், முறைகேடாக நியமனம் செய்யப்பட்டதாக கூறப்படும் 40 பேரையும் தகுதிகாண் பருவம் அடிப்படையில் நிரந்தரப் பணியில் அமர்த்த சிண்டிகேட்டில் ஒப்புதல் பெற்றதாக கூறப்பட்டது. இது தொடர்பாக தமிழக கவர்னர் தரப்பில் விளக்கம் கேட்கப்பட்டது. திருவள்ளுவன் முறையான பதிலை அளிக்கவில்லை என்று கூறி, அவரை கடந்த அக்டோபர் 20-ம் தேதி, பணியிடை நீக்கம் செய்தும், ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையில் குழு ஒன்றையும் அமைத்து விசாரணை நடத்த கவர்னர் உத்தரவிட்டார். இதையடுத்து, தொழில் மற்றும் நில அறிவியல் துறை பேராசிரியர் சங்கரை பொறுப்பு துணைவேந்தராக கவர்னர் நியமித்தார். அவர் பேராசிரியர்கள், பணியாளர்கள் மற்றும் மாணவர்களிடம் அசாதாரண சூழ்நிலையை உருவாக்கி வருவதாகவும், இதனால் பல்கலைகழகத்தில் சட்டம்- ஒழுங்கு பிரச்சினை ஏற்பட வாய்ப்பு உள்ளது என்றும், அவரை துணைவேந்தர் பொறுப்பிலிருந்து நீக்கப்படுவதாக பொறுப்பு பதிவாளரான தியாகராஜன் உத்தரவிட்டார். தொடர்ந்து, அவருக்குப் பதிலாக, ஆட்சிக்குழுவில் துணைவேந்தர் பொறுப்புக் குழு நியமிக்கப்படும் வரை, ஆட்சிக்குழு உறுப்பினர் பாரதஜோதி துணைவேந்தர் பணியை கவனிப்பார் என உத்தரவிட்டார்.
ஓய்வுபெற்ற நீதிபதி ஜெயச்சந்திரன் தலைமையிலான விசாரணை ஆணைய வரம்புக்குள் பொறுப்பு பதிவாளராக உள்ள தியாகராஜன் இருப்பதாலும், நிர்வாகக் காரணங்களுக்காக அவரை பொறுப்பில் இருந்து நீக்கப்படுவதாகவும், அவருக்குப் பதிலாக மறுஆணை பிறப்பிக்கும் வரை, அயல்நாட்டுத் தமிழ்க் கல்வித் துறையில் பணியாற்றும் இணைப் பேராசிரியர் வெற்றிச்செல்வன் பொறுப்பு பதிவாளராக இருப்பார் எனவும் பொறுப்பு துணைவேந்தர் சங்கரும் ஆணை பிறப்பித்து அதிரடித்தார். இப்போது துணைவேந்தர் அறை பூட்டப்பட்டு வெளியில் 2 போலீசார் பாதுகாப்பு பணியில் உள்ளனர். இங்கு போதனையை விட வேதனைதான் அதிகம் காணப்படுகிறது என்று தமிழறிஞர்கள், சமூக ஆர்வலர்கள் வேதனை தெரிவிக்கின்றனர். இத்தகைய சூழலில் தஞ்சை தமிழ்ப் பல்கலைகழகத்துக்கு துணைவேந்தரை நியமிக்க தேடுதல் குழுவை அறிவித்துள்ளது தமிழக அரசு. சென்னை ஐகோர்ட் முன்னாள் நீதிபதி வாசுகி, முன்னாள் அரசு முதன்மை செயலாளர் தீனபந்து ஆகியோர் அரசு தரப்பில் நியமிக்கப்பட்டுள்ளனர். சிண்டிகேட் பரிந்துரையின் பேரில் முன்னாள் பேராசிரியர் செல்வம், பெரியார் பல்கலைகழக முன்னாள் துணைவேந்தர் தங்கராசு ஆகியோர் நியமிக்கப்பட்டுள்ளனர். செனட் பரிந்துரையின் பேரில் திண்டுக்கல் காந்தி கிராம கிராமிய பல்கலைகழக பேராசிரியர் ராஜேந்திரன் தமிழ் பல்கலைகழக துணைவேந்தர் நியமனம் செய்ய தேர்வு குழுவாக அமைக்கப்பட்டுள்ளனர்.
Comments are closed.