தமிழக அரசுக்கும், ஆளுநர் ஆர்.என்.ரவிக்கும் பல்வேறு விஷயங்களில் கருத்து முரண்பாடு இருந்து வருகிறது. தமிழகத்தில் உள்ள முக்கிய பல்கலைக்கழகங்களில் காலியாக இருந்த துணைவேந்தர் பதவிகளை நிரப்ப முடிவு செய்த தமிழக அரசு, துணை வேந்தர் தேடுதல் குழுவை அமைத்தது. இந்த குழுவில் பல்கலைக்கழக மானியக்குழுவை (யு.ஜி.சி) சேர்ந்த உறுப்பினர்களை சேர்க்க வேண்டும் என்று தமிழக அரசுக்கு ஆளுநர் ஆர்.என்.ரவி உத்தரவிட்டார். இதில், ஏற்பட்ட கருத்து வேறுபாடு காரணமாக தமிழக அரசு சட்டசபையில் பல்கலைக்கழக திருத்த சட்ட மசோதாவை நிறைவேற்றி ஆளுநருக்கு அனுப்பியது. அதற்கு அவர் ஒப்புதல் அளிக்காமல் பல மாதங்கள் கிடப்பில் வைத்து இருந்தார். மேலும், 10 மசோதாக்களுக்கு ஒப்புதல் அளிக்காமல் நிறுத்தி வைத்திருந்தார். இந்த மசோதாக்களை தமிழக அரசு, 2023-ம் ஆண்டு நவம்பர் 18-ந் தேதி சட்டசபையில் மீண்டும் நிறைவேற்றி, ஆளுநருக்கு அனுப்பி வைத்தது. அதை அவர் 2023-ம் ஆண்டு நவம்பர் 28-ந் தேதி ஜனாதிபதி ஒப்புதலுக்கு அனுப்பினார். இதையடுத்து நிலுவையில் இருக்கும் மசோதாக்கள் மற்றும் துணைவேந்தர்கள் நியமனத்துக்கு ஒப்புதல் அளிக்கும் விவகாரத்தில் ஆளுநருக்கு எதிராக சுப்ரீம் கோர்ட்டில் தமிழ்நாடு அரசு ரிட் மனு தாக்கல் செய்தது.
இந்த மனுவை விசாரித்த சுப்ரீம் கோர்ட்டு நீதிபதிகள் ஜே.பி.பாரதிவாலா, ஆர்.மகாதேவன் ஆகியோர் அடங்கிய அமர்வு, மசோதாக்களை கிடப்பில் வைப்பது அல்லது நிராகரிக்கும் வீட்டோ அதிகாரம் ஆளுநருக்கு இல்லை. அதேபோல் ஒப்புதலுக்கு அனுப்பப்படும் மசோதாக்களில் கையெழுத்திடாமல் இருந்து அதனை பயனற்றதாக்கும் வீட்டோ அதிகாரமும் அவருக்கு இல்லை. இந்த வழக்கில் அரசியலமைப்பின் 142-வது பிரிவு வழங்கியுள்ள அதிகாரத்தை பயன்படுத்தி, ஜனாதிபதிக்கு அனுப்பி வைத்த 10 மசோதாக்களுக்கும் ஒப்புதல் அளிக்கிறோம். மக்கள் நலன்களுக்காக அரசு எடுக்கும் நடவடிக்கைகளுக்கு ஆளுநர்கள் முட்டுக்கட்டையாக இருக்கக்கூடாது” என்று தெரிவித்து இருந்தனர். ஆளுநருக்கு எதிராக தமிழ்நாடு அரசு தொடர்ந்த வழக்கில் 413 பக்க முழு தீர்ப்பு சுப்ரீம் கோர்ட்டின் இணைய பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ளது. ஆளுநருக்கு எதிரான வழக்கில் சுப்ரீம் கோர்ட்டு அளித்த தீர்ப்பு வெளியானதை அடுத்து, ஆளுநர் ஒப்புதல் அளிக்க மறுத்த 10 மசோதாக்களும் சட்டமானதாக தமிழ்நாடு அரசிதழில் அறிவிக்கப்பட்டுள்ளது.10 மசோதாக்களையும் ஆளுநர், ஜனாதிபதிக்கு அனுப்பியது சட்ட விரோதம் என சுப்ரீம் கோர்ட்டு தீர்ப்பு வழங்கியதுடன், அம்மசோதாக்களுக்கு ஒப்புதல் வழங்கப்பட்டதாக கருதவேண்டும் என தீர்ப்பு வழங்கியது. அதன் அடிப்படையில், அம்மசோதாக்களை அனுப்பிய 18 நவம்பர் 2023 தேதியில் கவர்னர் அதற்கு ஒப்புதல் அளித்ததாக கருத வேண்டும் என அந்த அரசிதழில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
Comments are closed.