தமிழக பட்ஜெட் நாளை( மார்ச் 14) தாக்கல்- மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்பு…!
தமிழக சட்டப்பேரவையின் 2025-ம் ஆண்டுக்கான முதல் கூட்டம் கடந்த ஜனவரி 6-ம் தேதி ஆளுநர் ஆர்.என்.ரவி உரையுடன் தொடங்கி முடிவடைந்தது. இந்நிலையில், சட்டப்பேரவையின் அடுத்த கூட்டத்தொடர் நாளை( மார்ச் 14) தொடங்குகிறது. நாளை காலை 9.30 மணிக்கு சட்டப்பேரவையில் 2025-2026-ம் ஆண்டுக்கான பட்ஜெட்டை நிதித்துறை அமைச்சர் தங்கம் தென்னரசு தாக்கல் செய்யவுள்ளார். கடந்த ஆண்டுகளில் தமிழக அரசுக்கு வந்த வருவாய், செலவுகள், வாங்கிய கடன், கடனுக்கான வட்டி போன்ற தகவல்களை அவர் வெளியிட இருக்கிறார். அதேபோல, 2025-26-ம் ஆண்டில் தமிழக அரசு உத்தேசமாக மேற்கொள்ள உள்ள செலவுகள் மற்றும் வருவாய் வரவுகள் போன்ற தகவல்களையும் அவர் அறிவிக்கவுள்ளார். அடுத்த ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் வரவுள்ளதால், இடைக்கால பட்ஜெட்டை மட்டுமே இந்த அரசு தாக்கல் செய்ய முடியும். ஆகவே, இந்த பட்ஜெட்டில் மக்களை கவரும் வகையில் பல்வேறு திட்டங்கள் இடம் பெற வாய்ப்புள்ளது. பட்ஜெட் தாக்கல் நிகழ்வு முடிந்ததும், அலுவல் ஆய்வுக் குழு கூட்டம் பேரவை தலைவர் அப்பாவு தலைமையில் நடைபெறும். அந்த கூட்டத்தில் பேரவையை எத்தனை நாட்கள் நடத்துவது, என்னென்ன அலுவல்களை எடுப்பது போன்றவைகள் குறித்து முடிவு எடுக்கப்படும்.
Comments are closed.