திருச்சி மாவட்டம் முழுவதும் தாலுகா வாரியாக பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம்…- விவரங்கள் இதோ!
திருச்சி மாவட்டம் முழுவதும் உள்ள 11 வட்டங்களிலும் நாளை (சனிக்கிழமை) பொதுவிநியோகத் திட்ட குறைதீர்க்கும் முகாம் நடைபெற உள்ளது. இதுகுறித்து திருச்சி மாவட்ட ஆட்சியர் வே. சரவணன், வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:
குடும்ப அட்டையில் பெயர் சேர்த்தல், நீக்கல், முகவரி மாற்றம் உள்ளிட்ட விவரங்கள் தொடர்பாக நவம்பர் மாதத்திற்கான குறைதீர் முகாம் நாளை அனைத்து வட்ட வழங்கல் அலுவலகங்களிலும் நடைபெறும். பொதுமக்கள் தங்களது மின்னணு குடும்ப அட்டையில் உள்ள பிழைகள், திருத்தங்கள் மற்றும் புகைப்பட பதிவு செய்வதற்கான விண்ணப்பங்களை, தேவையான ஆவணங்களுடன் அளித்து பயன்பெறலாம் என கூறப்பட்டுள்ளது. மேலும், தேசிய உணவு பாதுகாப்பு சட்டத்தின் கீழ் பயன்பெறும் முன்னுரிமை குடும்ப அட்டைகள் மற்றும் அந்தியோதயா அன்ன யோஜனா குடும்ப அட்டை வைத்திருக்கும் அட்டைதாரர்கள், தங்கள் குடும்ப அட்டையில் உள்ள அனைத்து உறுப்பினர்களின் விரல்சுட்டுரையை பதிவு செய்வது கட்டாயம் என மாவட்ட ஆட்சியர் தெரிவித்துள்ளார். இதுவரை பதிவு செய்யாதவர்கள், தாங்கள் வசிக்கும் இடத்துக்கு அருகிலுள்ள நியாயவிலை கடைகளில் நவம்பர் 25ம் தேதிக்குள் பதிவு செய்து கொள்ளுமாறு அறிவுறுத்தப்பட்டுள்ளது. அதேபோல், இம்முகாம் திருச்சி கிழக்கு வட்டத்தில் பாபு சாலை, திருச்சி மேற்கு வட்டத்தில் இலுப்பூர் சாலை, திருவெறும்பூர் வட்டத்தில் பிரகாஷ் நகர், ஸ்ரீரங்கம் வட்டத்தில் கல்லக்குடி, மணப்பாறை வட்டத்தில் தெற்குப்பொய்கைப்பட்டி, மருங்காபுரி வட்டத்தில் கவுண்டம்பட்டி, லால்குடி வட்டத்தில் குமுளூர், மண்ணச்சநல்லூர் வட்டத்தில் பூனாம்பாளையம், முசிறி வட்டத்தில் வாளவந்தி, துறையூர் வட்டத்தில் வெங்கடாசலபுரம், தொட்டியம் வட்டத்தில் முள்ளிப்பட்டி ஆகிய பகுதிகளில் உள்ள நியாயவிலைக் கடைகளில் நடைபெறும். இந்த குறைதீர் முகாம் நாளை காலை 10 மணி முதல் பிற்பகல் 1 மணி வரை, அந்தந்த வட்டங்களில் நியமிக்கப்பட்டுள்ள கண்காணிப்பு அலுவலர்கள் தலைமையில் நடைபெறும். பொதுமக்கள் தங்கள் வட்டம், தாலுகா அடிப்படையில் நடைபெறும் முகாம்களில் கலந்து கொண்டு, தங்கள் குடும்ப அட்டை தொடர்பான அனைத்து பிரச்சினைகளுக்கும் தீர்வு காண மாவட்ட ஆட்சியர் அழைப்பு விடுத்துள்ளார்.

Comments are closed.