தமிழக சட்டமன்ற தேர்தலில் தமிழக வெற்றிக் கழகம் 234 தொகுதிகளிலும் தனித்து போட்டியிடுகிறது. தனது கட்சி வேட்பாளர்களை ஆதரித்து விஜய் தீவிர பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். சென்னையில் போதிய பாதுகாப்பு வழங்கப்படாததால் இருமுறை தனது தேர்தல் பிரச்சாரத்தை ரத்து செய்தார். இந்நிலையில் நெல்லை, தென்காசி, தூத்துக்குடி மற்றும் கன்னியாகுமரி மாவட்டங்களில் உள்ள 22 சட்டமன்ற தொகுதி வேட்பாளர்களை ஆதரித்து பிரசார பொதுக்கூட்டம் நெல்லை பாளையங்கோட்டையில் நாளை 8-ந்தேதி (புதன்கிழமை) காலை 10 மணி அளவில் நடத்த திட்டமிடப்பட்டுள்ளது. இந்நிலையில் த.வெ.க. நிர்வாக குழு தலைமை ஒருங்கிணைப்பாளரும், முன்னாள் அமைச்சருமான செங்கோட்டையன் நேற்று நெல்லைக்கு வந்தார். அவர் நெல்லை மாவட்டத்தில் கங்கைகொண்டான் மற்றும் ராஜகோபாலபுரம். கே.டி.சி. நகர் உள்ளிட்ட விஜய் பிரசாரம் மேற்கொள்வதற்காக தேர்வு செய்யப்பட்டுள்ள இடங்களுக்கு நேரில் சென்று பார்வையிட்டு ஆய்வு செய்தார்.
இறுதியாக கே.டி.சி. நகர் பகுதியில் பிரசாரம் மேற்கொள்வதற்காக காவல்துறையினரிடம் அனுமதி கோரப்பட்டது. இதையடுத்து கே.டி.சி. நகர் பகுதியை காவல் அதிகாரிகள் ஆய்வு செய்தனர். இந்நிலையில் பல்வேறு கட்டுப்பாடுகளுடன் நெல்லையில் விஜய் பிரசாரம் மேற்கொள்ள காவல்துறை அனுமதி அளித்துள்ளது.
குறிப்பாக 5 ஆயிரம் பேருக்கு மட்டுமே அனுமதி அளிக்கப்பட்டுள்ளது. கர்ப்பிணிகள், குழந்தைகளுக்கு அனுமதி கிடையாது என்பது உள்ளிட்ட நிபந்தனைகள் விதிக்கப்பட்டன.

Comments are closed.