மதுரையில் த.வெ.க. 2-வது மாநில மாநாடு: சாரை, சாரையாக குவியும் தொண்டர்கள்…!* விமர்சனங்களுக்கு பதிலடி கொடுப்பாரா விஜய்..?
நடைபெற உள்ள தமிழக சட்டமன்ற தேர்தலில் நடிகர் விஜயின் தமிழக வெற்றிக்கழகம் முதல் முறையாக களம் காண்கிறது. இதற்காக அரசியலில் விறுவிறுப்பு காட்டி வரும் அவர் தனது முதல் மாநில மாநாட்டை விக்கிரவாண்டியில் பிரம்மாண்டமாக நடத்தினார். தற்போது இரண்டாவது மாநில மாநாட்டை மதுரையில் இன்று(21-08-2025) நடத்துகிறார். இதற்காக பிரம்மாண்ட மேடை அமைக்கப்பட்டுள்ளது. மாநாட்டில் பங்கேற்பதற்காக விடியற்காலை முதலே ஏராளமான தொண்டர்கள் வேன், கார், டூரிஸ்ட் வாகனங்களில் சாரை, சாரையாக வந்து குவிய தொடங்கினர். இதனை பார்க்கும்போது மதியத்திற்குள் தமிழகம் மற்றும் பிற மாநிலங்களில் இருந்து லட்சக்கணக்கான தொண்டர்கள் குவிவார்கள் என்று எதிர்பார்க்கப்படுகிறது. இன்று மாலைக்குள் மாநாட்டில் 15 லட்சம் முதல் 20 லட்சம் பேர் வரை பங்கேற்பார்கள் என கூறப்படுகிறது. வாகனம் பார்க்கிங் இடங்கள், குடிநீர் வசதி, மருத்துவ குழு, சுகாதார வசதிகள் சிறப்பான முறையில் செய்யப்பட்டுள்ளது. தொண்டர்கள் அமர்வதற்கு 60 பாக்ஸ்கள் அமைக்கப்பட்டு உள்ளன. ஒவ்வொரு பாக்ஸ்களிலும் சுமார் 2,500 பேர் அமரும் வசதி உருவாக்கப்பட்டு உள்ளது. குடிநீர் பற்றாக்குறை ஏற்படாத வண்ணம் பூமிக்கடியில் குழாய்கள் பதிக்கப்பட்டு சுத்திகரிக்கப்பட்ட குடிநீர் தட்டுப்பாடின்றி வழங்க ராட்சத குடிநீர் தொட்டிகள் மாநாடு பந்தலை சுற்றிலும் அமைக்கப்பட்டு உள்ளது. இதேபோன்று மாநாட்டுக்கு வரும் வழி நெடுகிலும் ஆங்காங்கே உணவு பொட்டலங்கள் வழங்கப்படும் என தெரிவிக்கப்பட்டது. மாநாட்டில் பாதுகாப்பு பணிக்காக சுமார் 3 ஆயிரம் போலீசார் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். தவெக சார்பில் 2 ஆயிரம் தனியார் பாதுகாவலர்களும் நியமிக்கப்பட்டுள்ளனர். 300 பெண் பவுன்சர்களும் பாதுகாப்பு பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர். இதனிடையே மாநாட்டு பந்தலில் அமைக்கப்பட்ட 20க்கும் மேற்பட்ட மருத்துவ முகாம்களுக்கான மருத்துவ மாணவர்கள் தற்போது வருகை தந்துள்ளனர். மாநாட்டில் விஜய் சிறப்புரையாற்றுகிறார். நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான், விஜய் கட்சித் தொண்டர்களை டீ விற்கும் கும்பல் என்றும், அணில் குஞ்சுகள் என்றும் கடுமையாக விமர்சித்துள்ளார். அதற்கு விஜய் தக்க பதிலடி கொடுப்பார் என்று எதிர்பார்க்கப்படுகிறது.
Comments are closed.