திருச்சி, திருவெறும்பூர் தொகுதிக்குட்பட்ட சூரியூரில் ஜல்லிக்கட்டு மைதானம் அமைக்கப்படும் என 2021 தேர்தல் சமயத்தில், தான் கொடுத்த முக்கியமான வாக்குறுதியை நிறைவேற்றி இருக்கிறார் முதல்வர் மு.க ஸ்டாலின். திருவெறும்பூர் தொகுதி எம்எல்ஏவும், தற்போதைய பள்ளிக்கல்வித்துறை அமைச்சருமான அன்பில் மகேஷ் பொய்யாமொழி. தமிழகத்தின் பிரசித்தி பெற்ற அலங்காநல்லூர், பாலமேடு போன்ற பகுதிகளை போலவே இனி ஆண்டுதோறும் நமது பகுதியான சூரியூரிலும் விமரிசையாக ஜல்லிக்கட்டு நடக்கும் என, ஏகபோக குஷியில் இருக்கிறார்கள் இப்பகுதி இளைஞர்கள். சுமார் 5 ஏக்கர் பரப்பளவில், 3 கோடி ரூபாய் மதிப்பீட்டில் வெறும் ஒன்பதே மாதத்தில் பயன்பாட்டுக்கு வரும் வகையில் ஜல்லிக்கட்டு மைதானத்திற்கான கட்டுமானப் பணிகள் திட்டமிடப்பட்டுள்ளன.அதன்படி புதிதாக அமைய உள்ள ஜல்லிக்கட்டு மைதானத்தில் என்னென்ன சிறப்பம்சங்கள் இடம்பெற உள்ளன என்பது குறித்து அரசு அதிகாரிகளிடம் விசாரித்தோம். அப்போது அவர்கள் கூறியதாவது., இரண்டரை கோடி ரூபாய் அரசு நிதி மற்றும் 50 லட்சம் ரூபாய் சட்டமன்ற உறுப்பினரின் தொகுதி மேம்பாட்டு நிதி என மொத்தம் 3 கோடி ரூபாய் செலவில் அமைய உள்ளது சூரியூர் ஜல்லிக்கட்டு மைதானம். இதில் அலுவலகம், முக்கிய விருந்தினர்கள் தங்குவதற்கான பிரத்தியேக அறைகள், ஜல்லிக்கட்டு வீரர்கள் உடை மாற்றுவதற்கான அறைகள், ஜல்லிக்கட்டு மைதானத்தின் இரண்டு பகுதிகளிலும் பார்வையாளர்கள் பார்ப்பதற்கான பிரம்மாண்ட கேலரிகள் ஆகியவை அமைய உள்ளது. இதில் சுமார் 810 பேர் அமரும் வகையில் இருக்கை வசதிகள் இருக்கும். மேலும்,ஜல்லிக்கட்டு மைதானத்திற்கு உள்ளேயே உடற்பயிற்சி அரங்கம், உள்விளையாட்டு அரங்கம் ஆகியவையும் அமைய உள்ளன என தெரிவித்தனர்.
Comments are closed.