தமிழகத்தில் சட்டசபை தேர்தல் அடுத்த ஆண்டு (2026) நடைபெற உள்ள நிலையில், தமிழக வெற்றிக் கழகம் முதல் முறையாக தேர்தலை சந்திக்கிறது. இதற்காக இரண்டு மாநாடுகளை வெற்றிகரமாக நடத்தி முடித்துள்ள விஜய், அடுத்த கட்டமாக ஒவ்வொரு சனிக்கிழமை தோறும் தேர்தல் பிரச்சாரம் மேற்கொண்டு வருகிறார். முதலில் மூன்று மாவட்டங்களில் தேர்தல் பிரச்சாரம் செய்ய முடிவு செய்த அவர், கூட்டம் அதிகமாக இருப்பதால் மூன்று மாவட்டங்களுக்கு செல்ல முடியாத நிலை ஏற்பட்டது. இதனால் இரண்டு மாவட்டங்களாக குறைத்துள்ளார். கடந்த 13-ந் தேதி திருச்சியில் சுற்றுப்பயணத்தை தொடங்கிய அவர், கடந்த 20-ம் தேதி (சனிக்கிழமை) நாகை, திருவாரூர் மாவட்டங்களில் பரப்புரை மேற்கொண்டார். அடுத்த கட்டமாக வருகிற 27ம் தேதி வடசென்னை மற்றும் திருவள்ளூரில் பிரசாரம் செய்ய விஜய் திட்டமிட்டிருந்தார். ஆனால் அதனை மாற்றி சேலம் மற்றும் நாமக்கல்லில் பிரசாரம் செய்ய உள்ளதாக அறிவிக்கப்பட்டது. இந்நிலையில், 27ம் தேதி சேலம் மற்றும் நாமக்கல்லில் சுற்றுப்பயணம் மேற்கொள்ள திட்டமிடப்பட்டிருந்த நிலையில், சேலத்திற்கு பதிலாக கரூரில் தவெக தலைவர் விஜய் பிரசாரம் செய்ய உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் காலை 11 மணியளவில் நாமக்கல் மாவட்டத்தில் விஜய் உரையாற்றுவார் எனவும், அதன்பிறகு கரூர் மாவட்டத்தில் மாலை 3 மணி அளவில் உரையாற்றுவார் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.