திருச்சியில் இருந்து அபுதாபிக்கு வாரத்தில் 4 நாட்கள் இயக்கப்பட்டு வந்த விமான சேவை அக்டோபர் 25 முதல் ரத்து செய்யப்படுகிறது என இண்டிகோ விமான நிறுவனம் தெரிவித்துள்ளது. இந்த நிறுவனம் சார்பில் உள்நாட்டு விமான சேவை மட்டுமே செயல்பட்டு வந்த நிலையில், 2024 ஆகஸ்ட் 11 முதல் திருச்சி -அபுதாபி இடையே விமான சேவையை தொடங்கியது. வாரத்தில் திங்கள், புதன், வெள்ளி, ஞாயிற்றுக்கிழமைகளில் நடந்து வந்த இந்த விமான சேவை சில நிர்வாகக் காரணங்களால், அக்டோபர் 25-ம் தேதி முதல் திருச்சி- அபுதாபி 4 விமானச் சேவைகளையும் ரத்து செய்வதாக இண்டிகோ நிறுவனம் அறிவித்துள்ளது. திடீரென விமான சேவை ரத்து செய்யப்பட்டு இருப்பது பயணிகளை அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. துபாய், சார்ஜா பயணக் கட்டணங்களை ஒப்பிடும்போது, அபுதாபி செல்வதற்கான கட்டணம் சற்று அதிகமாக உள்ளது. எனவே, அபுதாபி செல்லும் பயணிகளில் பல பேர், துபாய் அல்லது சார்ஜாவுக்கு சென்று அங்கிருந்து சாலை மார்க்கமாக அபுதாபி செல்வது அதிகரித்து வருவதாக கூறப்படுகிறது. இதன் காரணமாக திருச்சி- அபுதாபி இடையேயான விமான சேவை ரத்து செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் தெரிவிக்கின்றன.
Comments are closed.