முன்னாள் முதல்வர் ஜெயலலிதா தலைமையிலான அதிமுக அமைச்சரவையில் கல்வித்துறை அமைச்சராக பதவி வகித்தவர் செங்கோட்டையன். ஜெயலலிதா மறைவுக்குப் பிறகு முதலமைச்சர் யார் என்ற பெயர் பட்டியலில் இவரது பெயரும் இடம் பெற்றது. ஆனால் எதிர்பாராத விதமாக ஓ. பன்னீர்செல்வமும், அதனைத் தொடர்ந்து எடப்பாடி பழனிச்சாமியும் முதலமைச்சர் பதவிக்கு வந்தனர். கட்சியில் கே.ஏ.செங்கோட்டையன் எம்.எல்.ஏ.வுக்கும், பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமிக்கும் இடையே கருத்து வேறுபாடு இருந்து வருகிறது. அத்திக்கடவு-அவினாசி திட்டத்தை நிறைவேற்றியதற்காக எடப்பாடி பழனிசாமிக்கு கடந்த பிப்ரவரி மாதம் 9-ந் தேதி அன்னூரில் பாராட்டு விழா நடந்தது. இதில் மேடை உள்ளிட்ட எங்கும் முன்னாள் முதல்-அமைச்சர் ஜெயலலிதா, எம்.ஜி.ஆர். படங்கள் இடம்பெறவில்லை. இதனை சுட்டிக் காட்டிய கே.ஏ.செங்கோட்டையன் அந்த விழாவையும் புறக்கணித்தார். இந்த சம்பவம் அவர்களிடையே மேலும் விரிசலை ஏற்படுத்தியது. இந்தநிலையில் எடப்பாடி பழனிசாமி கடந்த 2 மாதங்களுக்கு முன்பு மேட்டுப்பாளையத்தில் பிரசார பயணத்தை தொடங்கியபோது எடப்பாடியில் இருந்து கோபி வழியாகவே மேட்டுப்பாளையம் சென்றார். அப்போது கோபியில் உள்ள வீட்டில் இருந்த கே.ஏ.செங்கோட்டையன், கட்சியின் பொதுச்செயலாளர் என்ற முறையில் எடப்பாடி பழனிசாமிக்கு கோபி எல்லையில் வரவேற்பு கூட அளிக்கவில்லை. இப்படி தொடர்ந்து இருவருக்கும் இடையே கருத்து வேறுபாடுகள் அதிகரித்து வந்தது. இதனால், அவர் அணி மாறுவார் என்று எதிர்பார்க்கப்பட்டது. இதுதொடர்பாக இன்று (5-09-2025) செய்தியாளர்களை சந்தித்து தெரிவிப்பேன் என்ற செங்கோட்டையன் அறிவித்து இருந்தார். அதன்படி இன்று செய்தியாளர்களை சந்தித்தார்.
அப்போது அவர் கூறுகையில், அண்ணாவின் தொண்டராக, மக்கள் மனதில் குடிகொண்டிருக்கும் தலைவராக எம்.ஜி.ஆர் விளங்கினார். நாடே வியக்கத்தக்க செல்வாக்கு மிக்கவராக திகழ்ந்தவர் எம்ஜிஆர். அவரது ஆட்சி பொற்கால ஆட்சி. அவருக்கு பிறகு உலக நாடுகளே திரும்பி பார்க்கும் வகையில் சிறந்த ஆட்சியை ஜெயலலிதா வழங்கினார். ஜெயலலிதா மறைந்தபிறகு, அதிமுக-விற்கு பல்வேறு சோதனைகள் வந்தன. இயக்கம் உடைந்துவிடக்கூடாது என்பதற்காக சசிகலாவை ஒருமனதாக நியமித்தோம். அனைவரும் சேர்ந்து சசிகலாவை பொதுச்செயலாளர் ஆக்கினோம். அதன்பிறகு பல்வேறு சோதனைகள் வந்தன. கட்சியில் தொய்வு ஏற்பட்டது. இதுதொடர்பாக கழக பொதுச்செயலாளரை சந்தித்து கழகம் தொய்வோடு இருப்பதை எடுத்துரைத்தோம். கழகத்தை ஒன்றிணைக்கவும், வெளியே சென்றவர்களை மீண்டும் இணைக்கவும் கோரிக்கை வைத்தோம். ஆனால் அவர் அதனை ஏற்கும் மன நிலையில் இல்லை. அதிமுகவில் இருந்து பிரிந்து சென்ற அனைவரையும் 10 நாட்களில் ஒருங்கிணைக்க வேண்டும். அப்படி இல்லையென்றால், ஒருங்கிணைப்பு பணிகளை நாங்களே மேற்கொள்வோம். பிரிந்து சென்றவர்களை ஒருங்கிணைக்காவிட்டால் வருகிற சட்டமன்ற தேர்தலில் வெற்றி சாத்தியமில்லை. இவ்வாறு அவர் கூறினார். பேட்டியின்போது கட்சி நிர்வாகிகள் பலர் உடன் இருந்தனர்.அதிமுக ஒன்றிணைய வேண்டும் என்று பேசிய செங்கோட்டையன் ஓபிஎஸ், சசிகலா, டிடிவி என்ற யாருடைய பெயரையும் குறிப்பிடவில்லை. அதேபோல், எடப்பாடி பழனிசாமியின் பெயரையும் உச்சரிக்கவில்லை.

Comments are closed.