எஸ்.ஐ.ஆர். படிவத்தை சமர்ப்பிக்க மேலும் 3 நாட்கள் கால அவகாசம்: 19ம் தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியீடு…!
பீகாரைத் தொடர்ந்து தமிழகம் உள்பட 12 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகள் மேற்கொள்ளப்பட்டு வருகின்றன. இதற்காக நவம்பர் மாத தொடக்கத்தில் இருந்து தமிழகத்தில் வீடு, வீடாக விண்ணப்ப படிவங்களை வாக்கு மைய நிலை அலுவலர்கள் வழங்கினர். இந்த விண்ணப்ப படிவங்களை நிரப்பி திருப்பி அளிப்பதற்கான கால அவகாசம் டிசம்பர் 4 என அறிவிக்கப்பட்டு இருந்தது. எனினும், குறுகிய காலத்திற்குள் இந்த பணியை செய்து முடிப்பது என்பது இயலாதது என தமிழக அரசு தரப்பில் எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது. இந்தநிலையில், எஸ்.ஐ.ஆர். நடைமுறைகள் டிசம்பர் 4-ந்தேதியுடன் முடிவடைய இருந்த சூழலில், கால அவகாசம் ஒரு வாரம் நீட்டிக்கப்பட்டது. இதன்படி, பூர்த்தி செய்யப்பட்ட விண்ணப்ப படிவங்களை திருப்பி ஒப்படைக்க டிசம்பர் 11 வரை அவகாசம் வழங்கப்பட்டது. எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கு தமிழகம், கேரளா எதிர்ப்பு தெரிவித்த நிலையில், தேர்தல் ஆணையத்தின் இந்த அறிவிப்பு வெளியிடப்பட்டு இருந்தது. இதன்பின்னர், டிசம்பர் 16 ந்தேதி வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும். வாக்காளர் இறுதி பட்டியல் பிப்ரவரி 14-ந்தேதி வெளியிடப்படும் என தெரிவிக்கப்பட்டது. இந்நிலையில், தமிழகம் உள்பட 6 மாநிலங்களில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான படிவங்களை திருப்பி ஒப்படைப்பதற்கான காலஅவகாசம் மேலும் 3 நாட்கள் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்படி தமிழகத்தில் எஸ்.ஐ.ஆர். பணிகளுக்கான படிவங்களை திருப்பி வழங்க டிசம்பர் 14-ந்தேதி வரை காலஅவகாசம் நீட்டிக்கப்பட்டு உள்ளது. இதன்பின்னர் வருகிற 19-ந்தேதி தமிழகம், குஜராத் மாநிலங்களில் வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

Comments are closed.